search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சார்ஜா சிசா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு சாதனங்களில் குழந்தைகள் விளையாடுவதை படத்தில் காணலாம்.
    X
    சார்ஜா சிசா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு சாதனங்களில் குழந்தைகள் விளையாடுவதை படத்தில் காணலாம்.

    சார்ஜாவில், 2 பூங்காக்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டன

    சார்ஜாவில் பெண்களுக்கான பிரத்யேக பூங்கா உள்பட 2 புதிய பூங்காக்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டன.
    சார்ஜா:

    சார்ஜா முதலீடு மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி அகமது ஒபைத் அல் கசீர் கூறியதாவது:-

    சார்ஜாவில் பெண்களுக்கான பிரத்யேக பூங்கா உள்பட 2 புதிய பூங்காக்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டு உள்ளது. இந்த பூங்காக்கள் அனைத்தும் சார்ஜா ஆட்சியாளர் மேதகு ஷேக் சுல்தான் பின் முகம்மது அல் காஸிமியின் வழிகாட்டுதலின் பேரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    சார்ஜாவின் அல் ரகுமானியா பகுதியில் இந்த 2 புதிய பூங்காக்களும் அமைக்கப்பட்டுள்ளது. சிசா மற்றும் சக்ரபா என இந்த பூங்காக்களுக்கு பெயரிடப்பட்டுள்ளது.

    இந்த 2 பூங்காக்களிலும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வசதிகள், குழந்தைகள் விளையாடும் வகையில் சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல், பொழுதுபோக்கு விளையாட்டு என பல்வேறு வசதிகளும் உள்ளன.

    சிசா பூங்காவானது முழு குடும்பத்தினரும் பயன்படுத்தும் வகையில் வசதி கொண்டது. இந்த பூங்காவில் கால்பந்து மற்றும் கூடைப்பந்து விளையாடும் வசதிகள் உள்ளன. மேலும் நூலகம், ஆம்பிதியேட்டர் எனப்படும் தியேட்டர் போன்ற உள்ளரங்கம், உடற்பயிற்சி கூடம், சைக்கிள் ஓட்டிச் செல்லும் வகையில் தனிப்பாதை, விளையாட்டு மைதானம், ஸ்கேட்டிங் போர்டு விளையாடும் வசதி, கருத்தரங்கு நடத்தும் வசதி உள்ளிட்டவைகள் உள்ளன. இதுமட்டுமல்லாமல் இந்த பூங்காவின் அருகில் செயற்கையான வகையில் சிறு ஏரி போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் வாத்துகள் உலா வருகின்றன. அந்த வாத்துக்களுக்கு உணவுப் பொருட்களை பொதுமக்கள் வழங்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. எனினும் வாத்துக்களுக்கு உணவளிக்கும் போது மேற்கொள்ளப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    சக்ரபா பூங்காவானது பெண்களுக்கு என பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு பூங்காவாகும். பெண்கள் மட்டுமே செல்வதற்கு வசதியாக இந்த பூங்காவிலும் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் உள்ளன. சர்வதேச பெண்கள் தினம் அனுசரிக்கப்படும் இந்த நேரத்தில் பெண்களுக்காக பிரத்யேக பூங்கா ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேற்கண்ட இந்த 2 பூங்காக்களும் ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 11 மணி வரையிலும் செயல்படும்.

    ரமலான் மாதத்தில் மதியம் 12 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் செயல்படும். எனினும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இடத்தை பொதுமக்கள் 24 மணி நேரமும் பயன்படுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.

    தற்போது கொரோனா பாதிப்பு இருப்பதால் பாதுகாப்பு விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×