search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ராணுவத்தின் அடக்குமுறைக்கு மத்தியிலும் மியான்மரில் தீவிரமடையும் மக்கள் போராட்டம்

    ராணுவத்தின் இத்தகைய அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் மியான்மரில் போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.
    நேபிடாவ்:

    மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைண்ட் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை சிறை வைத்துள்ள ராணுவம் நாட்டில் ஒரு வருடத்துக்கு அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது. இதற்கிடையில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மியான்மர் மக்கள் கடந்த 4 வாரங்களாக கடுமையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களை ராணுவம் இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகிறது.

    இதில் உச்சகட்டமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 18 பேர் கொல்லப்பட்டனர். 30-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ராணுவம் கைது செய்தது. அவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படலாம் என தெரிகிறது.

    இந்த நிலையில் ராணுவத்தின் இத்தகைய அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் மியான்மரில் போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.

    ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு பிறகு நேற்று யாங்கூன், மாண்டலே உள்ளிட்ட பல நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக இந்த போராட்டத்தில் பெருமளவு இளைஞர்கள் பங்கேற்றனர். அவர்கள் ராணுவத்தின் கண்ணீர் புகை குண்டு வீச்சு மற்றும் ரப்பர் குண்டு தாக்குதலை எதிர்கொள்ள இரும்புக் கவசங்களை கைகளில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இருப்பினும் யாங்கூன், மாண்டலே ஆகிய நகரங்களில் ராணுவ வீரர்கள் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசி ரப்பர் குண்டுகளால் சுட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Next Story
    ×