search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சமூக வலைத்தளங்கள் செய்திக்கு பணம் செலுத்த ஆஸ்திரேலியாவில் புதிய சட்டம்

    ஆஸ்திரேலியாவில் சமூக வலைத்தளங்கள் செய்திகளுக்காக பத்திரிகை நிறுவனங்களுக்கு பணம் செலுத்த வகை செய்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
    கான்பெர்ரா:

    ஆஸ்திரேலியாவில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியிடுவதற்கு பத்திரிகை நிறுவனங்களுக்கு பணம் தர வகை செய்து ஒரு சட்டம் இயற்றப்பட்டது.

    ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேஸ்புக் நிறுவனம், தனது வலைத்தளத்தில் செய்திகளை வெளியிட கடந்த வாரம் திடீரென தடை விதித்தது. இதனால் இந்த தளத்தில் செய்திகளை வாசித்து வந்த ஆஸ்திரேலியர்கள் கடும் பாதிப்புக்கு ஆளானார்கள். பேஸ்புக்கின் இந்த செயலுக்கு அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரீசன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

    அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அரசுக்கும், பேஸ்புக் நிறுவனத்துக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு விலக்கு அளித்து செய்தி ஊடக பேரம் பேசும் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

    ஆனாலும், ஆஸ்திரேலியாவில் உள்ள பத்திரிகை வெளியீட்டாளர்களுக்கு லாபகரமான தொகையை தருவதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன.

    சமூக வலைத்தளங்கள் செய்திகளுக்காக பத்திரிகை நிறுவனங்களுக்கு பணம் செலுத்த வகை செய்து உலகிலேயே முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டம், பிற நாடுகளும் இதே போன்ற சட்டத்தை இயற்ற வழிகாட்டுவதாக அமைந்துள்ளது.

    இந்த சட்டம், தொழில்நுட்ப நிறுவனங்களும், பத்திரிகை நிறுவனங்களும் தங்களுக்கு இடையேயான கட்டண ஒப்பந்தங்களை முடிவு செய்வதற்கு பேச்சுவார்த்தை நடத்த ஊக்குவிக்கிறது. இத்தகைய பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் சமூக வலைத்தள நிறுவனங்களை பத்திரிகை நிறுவனங்கள் சுயாதீன நடுவர் மன்றங்களுக்கு இழுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த சட்ட திருத்தத்தை தொடர்ந்து பேஸ்புக் நிறுவனம், செய்திகள் வெளியீட்டுக்கு விதித்திருந்த தடையை அகற்ற ஒப்புக்கொண்டுள்ளது.
    Next Story
    ×