search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அபுதாபியின் மஸ்தார் சிட்டி பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி மையத்தை படத்தில் காணலாம்.
    X
    அபுதாபியின் மஸ்தார் சிட்டி பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி மையத்தை படத்தில் காணலாம்.

    அபுதாபியின் மஸ்தார் சிட்டி பகுதியில் புதிய கொரோனா தடுப்பூசி மையம்

    அபுதாபியின் மஸ்தார் சிட்டி பகுதியில், புதிய கொரோனா தடுப்பூசி மையம் நேற்று திறக்கப்பட்டது.
    அபுதாபி:

    மஸ்தார் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    அமீரகத்தில் கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசியானது அமீரகம் முழுவதும் போடப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில், அபுதாபியின் மஸ்தார் சிட்டி பகுதியில் வசித்து வரும் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில், புதிய கொரோனா தடுப்பூசி போடும் மையம் இங்கு தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய மையமானது அரசு மற்றும் தனியார் நிறுவனத்தின் ஒத்துழைப்பின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய மையத்தில் கொரோனா தடுப்பூசிகளை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை வார நாட்களில் போட்டுக் கொள்ளலாம். மேலும் இந்த மையத்தில், 50 வயதுக்கு மேற்பட்ட அமீரகத்தைச் சேர்ந்தவர்களும், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் தடுப்பூசியினை இலவசமாக போட்டுக் கொள்ளலாம். இதில், நாள்பட்ட வியாதிகளை உடையவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

    இந்த தடுப்பூசி மையத்துக்கு வரும் பொதுமக்கள் கார் நிறுத்தும் இடத்தில் இருந்து விரைவாக வரும் வகையில் பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகன வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    இந்த தடுப்பூசியை போடுவதற்கு முன்பதிவு செய்யவேண்டிய கட்டாயமில்லை. எனினும் அமீரக அடையாள அட்டையை பொதுமக்கள் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். மேலும் பொதுமக்கள் தங்களது செல்போன்களில் அல் ஹொசன் செயலியை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

    அமீரகத்தின் தேசிய இலக்கின் ஒரு பகுதியாக கொரோனா பாதிப்பை தடுக்க உதவும் வகையில் இந்த புதிய தடுப்பூசி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணியில் மஸ்தார் நிறுவனம் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கும்.

    கடந்த மார்ச் மாதம் கொரோனா பரிசோதனை மையம் இந்த பகுதியில் தொடங்கப்பட்டது. இந்த மையமானது, அதிகமான பரிசோதனைகளை விரைவாக செய்யும் வகையில் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 
    Next Story
    ×