search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வன்முறையைத் தூண்டுவதாக மியான்மர் ராணுவத்தின் பேஸ்புக் பக்கம் நீக்கம்

    மியான்மர் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கமான டாட்மேடவ் பேஸ்புக் வரம்புகளை மீறியதற்காக முடக்கப்பட்டுள்ளது.
    நேபிடாவ்:

    மியான்மரில் கடந்த தேர்தலில் ஆங் சாங் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக அந்நாட்டு ராணுவம் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்ததுடன், புதிய அரசை ஏற்கவும் ராணுவம் மறுப்பு தெரிவித்து வந்தது.

    இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் ஆங் சாங் சூகி தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்த ராணுவம் பொறுப்பை கைப்பற்றிக் கொண்டது. அத்துடன், ஆங் சாங் சூகி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களையும் ராணுவம் வீட்டுச் சிறையில் வைத்தது.

    இதையடுத்து, மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராகப் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ராணுவம் விதித்துள்ள தடையை மீறி இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் போராட்டத்தை ஒடுக்க அடக்கு முறையை ராணுவம் கையாண்டு வருகிறது.

    கடந்த 20 நாட்களாக மியான்மரில் ஜனநாயக ஆதரவாளர்கள் யாங்கூன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டப் பேரணிகளை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து அங்கு தற்காலிகமாக இணைய சேவை முடக்கப்பட்டது. காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

    ராணுவத்தினரின் இந்த அடக்குமுறை நடவடிக்கைக்கு உலகம் முழுக்க இணையத்தில் கடும் கண்டனம் குவிந்தது. பேஸ்புக் தளம் மியான்மர் நாட்டில் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் இயங்கி வருகிறது.

    போராட்டக்காரர்கள் பலர் போராட்டங்கள் குறித்த புகைப்படங்கள் தகவல்களை பேஸ்புக் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். போராட்டத்தின் உச்சகட்டமாக கலவரத்தில் ஈடுபட்ட இரு போராட்டக்காரர்கள் ராணுவத்தினரால் முன்னதாக சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்தப் போராட்டம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது.

    இந்நிலையில், மியான்மர் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கமான டாட்மேடவ், பேஸ்புக் வரம்புகளை மீறியதற்காக முடக்கப்பட்டுள்ளது. பலமுறை பேஸ்புக்கின் வரம்புகளை இந்த ராணுவ பக்கம் மீறி வந்ததால் தற்போது முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×