search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்
    X
    மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்

    ஐ.நா. அமைதி படையினருக்கு 2 லட்சம் டோஸ் தடுப்பூசி - இந்தியா அறிவிப்பு

    கடினமான சூழலில் பணியாற்றும் ஐ.நா. அமைதிப்படையினருக்கு 2 லட்சம் டோஸ் தடுப்பூசியை இந்தியா பரிசாக வழங்கும் என மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.
    நியூயார்க்:

    கொரோனா சூழலில் மோதல்களை தடுத்தல் என்ற தலைப்பில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் திறந்தவெளி விவாதம் நடந்தது. இதில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மெய்நிகர் முறையில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் இந்தியாவின் தடுப்பூசி திட்டம், தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி குறித்து விளக்கினார்.

    அவர் கூறுகையில், ‘அடுத்தவரின் நலன்களை மனதில் வைத்து எப்போதும் பணி செய்யுங்கள் என்று பகவத் கீதையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதை மனதில் வைத்தே கொரோனா சவால்களை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. அந்தவகையில் இன்று, சர்வதேச தடுப்பூசி சவால்களை எதிர்கொள்ளும் வகையில் உலகின் மருந்தகம் முன்னோக்கி அடியெடுத்து வைக்கிறது’ என்று கூறினார்.

    இந்தியாவின் ‘தடுப்பூசி மைத்ரி’ திட்டத்தின் கீழ் பல்வேறு உலக நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசி வழங்கி வருவதாக கூறிய ஜெய்சங்கர், அந்தவகையில் தனது அண்டை நாடுகள் மற்றும் 25 உலக நாடுகளுக்கும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார். இன்னும் 49 நாடுகளுக்கு தடுப்பூசி வழங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    கடினமான சூழலில் பணியாற்றும் ஐ.நா. அமைதிப்படையினரை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு 2 லட்சம் டோஸ் தடுப்பூசியை இந்தியா பரிசாக வழங்கும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
    Next Story
    ×