search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக சுகாதார அமைப்பின் குழுவினர்
    X
    உலக சுகாதார அமைப்பின் குழுவினர்

    வுகான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியிருக்க வாய்ப்பு இல்லை- உலக சுகாதார அமைப்பு

    எந்த விலங்கில் இருந்து கொரோனா தொற்று பரவியது? என்பது குறித்து உலக சுகாதார அமைப்பின் குழுவினரால் அடையாளம் காணப்படவில்லை.
    வுகான்:

    சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று எவ்வாறு தொடங்கியது என்பது குறித்த விசாரணை மேற்கொண்ட உலக சுகாதார அமைப்பின் சிறப்பு ஆராய்ச்சி குழு, கடந்த ஒரு மாதத்தில் அவர்கள் கண்டுபிடித்ததை இன்று வெளியிடவுள்ளதாக அறிவித்து இருந்தனர். அதன்படி, இன்று ஆய்வு முடிவுகளை வெளியிட்டனர். விசாரணையில் ஈடுபட்டுள்ள சீனத் தரப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் உலக சுகாதார நிபுணர்களுடன் இணைந்து இன்று தங்கள் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தினார்கள்.

    உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு ஜனவரி 14-ஆம் தேதி வுகான் நகரத்தை சென்றடைந்தது. இரண்டு வார தனிமைப்படுத்தலுக்குப் பிறகு, கொரோனா வைரஸுடன் தொடர்புடையதாக அறியப்பட்ட முக்கிய தளங்களை பார்வையிட்டது. அவர்கள் முதலில் தொற்றுநோயின் தொடக்க இடமான ஹுவானன் கடல் உணவு சந்தையையும், கொரோனா  தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள வுகான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி ஆய்வகத்தையும் பார்வையிட்டனர்.

    வுகான் ஆய்வகம்

    வுகான் வைராலஜி இன்ஸ்டிடியூட்டில் ஆழ்ந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது, அங்கு அவர்கள் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் செலவிட்டனர், மேலும் அவர்கள் கொரோனா வைரஸ்கள் குறித்த சீனாவின் முன்னணி நிபுணர்களில் ஒருவரும், வுகான் ஆய்வகத்தின் துணை இயக்குநருமான ஷி ஜெங்லி உட்பட பல விஞ்ஞானிகளை  சந்தித்தனர்.

    கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக பல இடங்களில் விசாரணைகள் மேற்கொண்ட நிலையில், பல முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளதாக குழு தெரிவித்துள்ளது.

    ஒரு வருடத்திற்கு முன்பு, தொற்றுநோய் கொத்துக்கொத்தாக பரவத் தொடங்கியதாக கூறப்படும் கடல் உணவு சந்தையில் இந்த குழு ஒரு மணிநேரம் மட்டுமே செலவழித்தது. அதேசமயம், ஆய்வுக்குழுவினர் தங்கள் ஓட்டலுக்குள் பல நாட்கள் கழித்ததாக கூறப்படுகிறது.

    ஆய்வு முடிவுகள் குறித்து ஆய்வுக்குழு கூறியதாவது:-

    2019 டிசம்பருக்கு முன்னர் வுகானில் அல்லது வேறு எங்கும் கொரோனா உடன் தொடர்புடைய பெரிய நோய் தொற்று குறித்து குழு  எதுவும்  கண்டுபிடிக்கவில்லை. எந்த விலங்கில் இருந்து கொரோனா தொற்று பரவியது? என்பது குறித்த அடையாளம் காணப்படவில்லை. ஆய்வக கசிவினால் கொரோனா பரவியது என்பது மிகவும் சாத்தியமில்லை. இவ்வாறு கூறி உள்ளது.

    உலக சுகாதார அமைப்பின் பென் எம்பரேக் கூறுகையில், சமீபத்திய வுகான் விசாரணையில் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன, ஆனால் கொரோனா வெடித்த விஷயத்தை  வியத்தகு முறையில் மாற்றவில்லை. உகான் ஹுவானன் சந்தைக்கு வெளியே 2019 டிசம்பரில் பரவலாக கொரோனா இருந்ததற்கான ஆதாரங்களை குழு கண்டறிந்து உள்ளது என கூறினார்.

    உலகளவில் 23 லட்சம், மக்களை பலிவாங்கிய இந்த நோய் - வவ்வால்களில் தோன்றியது மற்றும்  பாலூட்டி வழியாக மனிதர்களுக்கு பரவி இருக்க கூடும் என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர். ஆனால் உலக சுகாதார அமைப்பின் ஆய்வுக்குழு கொரோனா நோய் தொற்றுக்கு காரணமான உரிய விலங்கு குறித்த ஆதாரம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என கூறி உள்ளது.

    ‘விலங்குகளிடமிருந்து பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், இதுவரை அதற்குரிய ஆதாரங்கள் அடையாளம் காணப்படாமல் உள்ளன" என்று சீனா அணியின் தலைவர் லியாங் வனியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    வுகான் ஆய்வக கசிவு தொற்றுநோய்க்கு ஆதாரமாக இருந்திருக்கலாம் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் சர்ச்சைக்குரிய கருத்தை கூறியிருந்தார். ஆனால், சீனாவில் ஆய்வு செய்த உலக சுகாதார அமைப்பின் குழு, டிரம்பின் கருத்தை நிராகரித்துள்ளது.
    Next Story
    ×