search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    அமெரிக்கா உடனடியாக அணுசக்தி ஒப்பந்தத்துக்கு திரும்ப வேண்டும் - ஈரான் வலியுறுத்தல்

    டிரம்பின் விரோதக் கொள்கைகளை நிறுத்த விரும்பினால் அமெரிக்கா உடனடியாக அணுசக்தி ஒப்பந்தத்துக்கு திரும்ப வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது.
    டெஹ்ரான்:

    அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டில் கையெழுத்தன ஒப்பந்தம் அணுசக்தி ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது.

    தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரானும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகளை நீக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினா்களான அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளும் ஒப்புக் கொண்டு கையெழுத்திட்ட ஒப்பந்தம்தான் அது.

    இதனிடையே இந்த ஒப்பந்தம் அமெரிக்க நலன்களுக்கு எதிராக இருப்பதாக கூறி கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.

    மேலும் அவர் ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தார். அதற்கு பதிலடியாக ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட விதிகளை ஒவ்வொன்றாக மீறியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் படிப்படியாக வளர்ந்து தீரா பகையாய் உருவானது.

    இந்தநிலையில் அமெரிக்காவில் தற்போது டிரம்ப் நிர்வாகம் ஆட்சியில் இருந்து வெளியேறி ஜோ பைடன் தலைமையில் புதிய நிர்வாகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது.‌ ஜோ பைடன் ஆட்சியில் அமெரிக்கா ஈரான் இடையிலான பதற்றம் தணிந்து இணக்கமான சூழல் உருவாகும் என ஈரான் நம்புகிறது.‌ மேலும் அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைவதற்கு ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்துக்கு ஈரான் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. அதேசமயம் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு முழுமையாக இணங்கி நடந்தால் மீண்டும் அந்த ஒப்பந்தத்தில் இணைய தயாராகவுள்ளதாக அமெரிக்கா கூறி வருகிறது.

    இந்த நிலையில் ஈரானின் மூத்த தலைவர் அயத்துல்லா அலி காமேனி ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா திரும்பப் பெற்றால் மட்டுமே அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஈரான் முழுமையாக இணங்கி நடக்கும் என கூறினார்.

    இதனிடையே வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஈரானின் மூத்த தலைவர் கருத்து குறித்து ஜனாதிபதி ஜோ பைடனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.‌

    அதற்கு பதிலளித்த ஜோ பைடன், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் பேச்சுவார்த்தைக்கு வராதவரை அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க போவதில்லை என திட்டவட்டமாக கூறினார்.

    இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் விரோத கொள்கைகளை உண்மையில் நிறுத்த விரும்பினால் ஈரானுக்கு விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை நீக்கி விட்டு உடனடியாக அணுசக்தி ஒப்பந்தத்துக்கு திரும்ப வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து ஈரான் வெளியுறவு மந்திரி முகமது ஜாவத் ஷரீப் கூறுகையில் ‘‘இந்த ஒப்பந்தத்தை விட்டு வெளியேறியது அமெரிக்காதான். இந்த ஒப்பந்தத்தை மீறியது அமெரிக்காதான். ஒப்பந்தத்துக்கு முறையாக இணங்கி நடந்த ஈரானை தண்டித்தது அமெரிக்காதான்.‌ எனவே அமெரிக்கா தான் இந்த ஒப்பந்தத்துக்கு திரும்ப வேண்டும். அமெரிக்காதான் ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு இணங்கி நடக்க வேண்டும்’’ எனக் கூறினார்.
    Next Story
    ×