search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொழும்பு துறைமுகம்
    X
    கொழும்பு துறைமுகம்

    கொழும்பு துறைமுக ஒப்பந்தத்தை ரத்து செய்தது இலங்கை... உறுதிமொழிகளை பின்பற்ற இந்தியா வலியுறுத்தல்

    கொழும்பு துறைமுக ஒப்பந்தத்தை இலங்கை ரத்து செய்துள்ள நிலையில், இலங்கை அரசு சர்வதேச உறுதிமொழிகளை பின்பற்றும்படி இந்தியா வலியுறுத்தி உள்ளது.
    கொழும்பு:

    கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கன்டெய்னர் முனையம் அமைக்க இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இலங்கை அரசு கடந்த 2019-ம் ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன்படி, கன்டெய்னர் முனையம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை இந்தியா, ஜப்பான் நாடுகள் செய்து வந்த நிலையில், சமீபத்தில் இந்த ஒப்பந்தத்தை இலங்கை ரத்து செய்தது. 

    கொழும்பு துறைமுகத்தில் உள்ள தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக இந்த ஒப்பந்தத்தை இலங்கை ரத்து செய்துள்ளதாகத் தெரிகிறது. 

    இலங்கை அரசின் இந்த முடிவு குறித்த தகவல் வெளியானதும்,  கொழும்பில் உள்ள இந்திய தூதரக செய்தித் தொடர்பாளர் தனது கருத்தை தெரிவித்தார். அனைத்து தரப்பினரும் தற்போதுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் உறுதிமொழிகளை தொடர்ந்து கடைப்பிடிக்கவேண்டும் என அவர் கூறினார். 

    இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே, வெளியுறவுத்துறை மந்திரி தினேஷ் குணவர்த்னே ஆகியோரை இந்திய தூதர் சந்தித்து பேசி உள்ளார். அப்போது இந்தியாவின் நிலைப்பாட்டை அவர் எடுத்துரைத்தார்.

    இந்நிலையில், சர்வதேச உறுதிமொழிகளை இலங்கை அரசு கடைப்பிடிக்கும்படி இந்திய அரசு மீண்டும் வலியுறுத்தியது. 

    இதுபற்றி இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ‘சர்வதேச உறுதிமொழிகளை கடைப்பிடிப்பதன் முக்கியத்துவம் குறித்து கொழும்பில் உள்ள இந்திய தூதர், இலங்கை அரசாங்கத்துடன் பேசியிருக்கிறார். இந்த முத்தரப்பு ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்தது. 

    இந்தியா மற்றும் ஜப்பானில் இருந்து வரும் வெளிநாட்டு முதலீட்டைக் கொண்டு, துறைமுகங்கள் மற்றும் எரிசக்தி போன்ற துறைகளில் இலங்கையில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, பரஸ்பர நன்மை தரும்’ என நம்பிக்கை தெரிவித்தார்.

    இதற்கிடையே, கொழும்பு துறைமுகத்தின் மேற்குப் பகுதியில் கன்டெய்னர் முனையம் அமைக்கலாம் என இந்தியா மற்றும் ஜப்பானுக்கு இலங்கை அழைப்பு விடுத்துள்ளது.
    Next Story
    ×