search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாஸ்கோ நீதிமன்றத்தில் நவால்னி
    X
    மாஸ்கோ நீதிமன்றத்தில் நவால்னி

    சிறைத்தண்டனை விதித்ததால் ஆத்திரம்... ரஷிய எதிர்க்கட்சி தலைவருக்கு ஆதரவாக வலுக்கும் போராட்டம்

    ரஷியாவில் எதிர்க்கட்சி தலைவர் நவால்னிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    மாஸ்கோ:

    ரஷியா நாட்டு எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி. இவர் அதிபர் புதினையும், அவரது அரசையும் கடுமையாக விமர்சித்து போராட்டம் நடத்தி வருகிறார்.

    கடந்த ஆண்டு செப்டம் பர் மாதம் தலைநகர் மாஸ்கோவுக்கு சென்றபோது அலெக்சி நவால்னி விமானத்தில் மயங்கி விழுந்து கோமா நிலைக்கு சென்றார். சிகிச்சைக்காக ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதனையில் நவால்னி அருந்திய தேனீரில் வி‌ஷம் கலந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் தீவிர சிகிச்சையால் குணமடைந்து அவர் கடந்த 17-ந் தேதி ரஷியா திரும்பினார்.

    அப்போது அவரை மோசடி வழக்கில் பரோல் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டில் விமான நிலையத்திலேயே போலீசார் கைது செய்தனர்.

    இதனால் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். அலெக்சி நவால்னியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தின.

    அலெக்சி நவால்னி மீதான வழக்கு விசாரணை மாஸ்கோ நீதிமன்றத்தில் நடந்தது. இதில் அவருக்கு 3½ ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அவர் சில காலம் வீட்டு காவலில் இருந்ததால் அதற்கேற்ப தண்டனை காலம் குறைக்கப்படும் என்று கோர்ட்டு தெரிவித்துள்ளது.

    நவால்னிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து அவரது ஆதரவாளர்களின் போராட்டம் தீவிரமடைந்து இருக்கிறது.

    அலெக்சி நவால்னிக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

    இதற்கிடையே தனக்கு விதிக்கப்பட்டுள்ள ஜெயில் தண்டனையை எதிர்த்து நவால்னி மேல்முறையீடு செய்வார் என்று அவரது வக்கீல்கள் தெரிவித்துள்ளனர். 

    Next Story
    ×