search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் இந்தியாவில் நேரடி அன்னிய முதலீடு 13 சதவீதம் உயர்வு - ஐ.நா. சபை தகவல்

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியிலும் நேரடி அன்னிய முதலீடு 13 சதவீதம் உயர்ந்துள்ளதாக ஐ.நா. சபை கூறி உள்ளது.
    நியூயார்க்:

    ஐ.நா. வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு மாநாடு முதலீட்டு போக்குகள் கண்காணிப்பு அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டது. இதில் இடம்பெற்றுள்ள முக்கியமான தகவல்கள் வருமாறு:-

    * 2020-ம் ஆண்டு கொரோனா வைரஸ் பெருந்தொற்றால், உலகளாவிய அன்னிய நேரடி முதலீடு 42 சதவீதம் சரிவு அடைந்துள்ளது. எதிர்பார்க்கப்பட்ட 1.5 லட்சம் கோடி டாலருக்கு (சுமார் ரூ. 109 லட்சத்து 50 ஆயிரம் கோடி) பதிலாக 859 பில்லியன் டாலர்தான் (சுமார் ரூ.62 லட்சத்து 70 ஆயிரத்து 700 கோடி) வந்துள்ளது.

    * 1990-களிலும், 2008-09 உலகளாவிய நிதி நெருக்கடியிலும்தான் இந்தளவுக்கு நேரடி அன்னிய முதலீடு, இதற்கு முன்பாக குறைந்துள்ளது.

    * வளர்ந்த நாடுகளில்தான் அன்னிய நேரடி முதலீடு 69 சதவீதம் குறைந்துள்ளது.

    * இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு 13 சதவீதம் உயர்ந்துள்ளது. டிஜிட்டல் துறையில் வந்துள்ள முதலீடுகளால் இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது. இந்தியாவில் நேரடி அன்னிய முதலீட்டின் அளவு 57 பில்லியன் டாலர் (சுமார் ரூ.4 லட்சத்து 16 ஆயிரத்து 100 கோடி) ஆகும். இந்தியாவின் டிஜிட்டல் துறையில் கையகப்படுத்துதல்கள் இந்த உயர்வுக்கு காரணம் ஆகும்.

    * இந்தியாவில் எல்லை தாண்டிய இணைப்புகள், கையகப்படுத்துதல்கள் விற்பனை 83 சதவீதம் அதிகரித்து 27 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 97 ஆயிரத்து 100 கோடி) ஆகி உள்ளது. பேஸ்புக் நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் 9.9 சதவீத பங்குகளை, தனது ஜாது ஹோல்டிங்ஸ் எல்எல்சி மூலம் கையகப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    * உலகின் மிகப்பெரிய அன்னிய நேரடி முதலீட்டை பெற்று வந்த சீனாவில், 2020-ம் ஆண்டு அன்னிய நேரடி முதலீடு 4 சதவீதம் உயர்ந்து 163 பில்லியன் டாலர் (சுமார் ரூ-.11 லட்சத்து 89 ஆயிரத்து 900 கோடி) வந்துள்ளது.

    * இங்கிலாந்து, இத்தாலி, ரஷியா, ஜெர்மனி, பிரேசில், அமெரிக்கா ஆகிய முன்னணி பொருளாதார நாடுகளில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் அன்னிய நேரடி முதலீடு மிக கணிசமாக குறைந்துள்ளது. ஆனாலும், இந்தியாவும், சீனாவும் இந்த போக்கை மாற்றி அதிகளவு அன்னிய நேரடி முதலீட்டை பெற்றுள்ளன.

    * தெற்காசியாவில் அன்னிய நேரடி முதலீடு 10 சதவீதம் அதிகரித்து 65 பில்லியன் டாலர் (சுமார் ரூ.4 லட்சத்து 74 ஆயிரத்து 500 கோடி) வந்துள்ளது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×