search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இருநாட்டு கொடிகள்
    X
    இருநாட்டு கொடிகள்

    இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் தூதரகம் அமைக்க ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புதல்

    வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகம் இஸ்ரேல் நாட்டில் தனது தூதரகத்தை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.
    அபுதாபி:

    இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த மோதலை தணிக்கும் விதமாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பயனாக 1979-ம் ஆண்டு எகிப்தும், 1994-ம் ஆண்டு ஜோர்டானும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டன. மேலும், இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்தன.

    ஆனால் பிற அரபு வளைகுடா நாடுகள் இஸ்ரேலுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தன. மேலும், இஸ்ரேலை ஒரு தனிநாடாக ஏற்றுக்கொள்ளாமலும், அந்நாட்டுடன் பொருளாதாரம், ராஜாங்கம், தூதரகம் உள்பட எந்தவித உறவுகளையும் ஏற்படுத்தாமல் இருந்தன.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முயற்சியால் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் நாடுகள் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள சம்மதம் தெரிவித்தன. இதையடுத்து, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி இஸ்ரேல் - ஐக்கிய அரபு அமீரகம் - பஹ்ரைன் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

    ஆபிரகாம் உடன்படிக்கை என பெயரிடப்பட்டுள்ள இந்த அமைதி ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, ஐக்கிய அரபு அமீரகத்தின் இளவரசரும், வெளியுறவுத் துறை மந்திரியுமான ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் மற்றும் அப்துல்லாதீப் அல் சயானி ஆகியோர் கூட்டாக கையெழுத்திட்டனர்.

    இந்த ஒப்பந்தத்தின் மூலம் இஸ்ரேல் தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டு அந்நாட்டுடன் விமானப் போக்குவரத்து, தூதரக நடவடிக்கைகள், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறையில் இணைந்து செயல்பட ஐக்கிய அரபு அமீரகம் சம்மதம் தெரிவித்தது. 

    அதன் பயனாக இஸ்ரேலில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சவுதி அரேபியா வழியாக விமானப்போக்குவரத்து சேவை தொடங்கி நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் தலைநகரில் தூதரகத்தை அமைக்கவும் அமீரகம் திட்டமிட்டது.

    இந்நிலையில், வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகம் இஸ்ரேல் நாட்டில் தனது தூதரகத்தை அமைக்க அந்நாடு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
    Next Story
    ×