search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜய் மல்லையா
    X
    விஜய் மல்லையா

    நாடு கடத்தலில் இருந்து தப்பிக்க விஜய் மல்லையா புதிய முயற்சி

    நாடு கடத்தலில் இருந்து தப்பிக்க விஜய் மல்லையா புதிய முயற்சியை மேற்கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவர் இங்கிலாந்தில் தனக்கு தஞ்சம் அளிக்குமாறு விண்ணப்பித்துள்ளார்.
    லண்டன்:

    பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு அதனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்து விட்டு கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் லண்டனுக்கு தப்பிச் சென்று தலைமறைவானார்.

    அவர் மீது சி.பி.ஐ,.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்தை சேர்ந்த வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு 2018 டிசம்பரில் உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து அவர் லண்டனில் உள்ள ராயல் ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். இந்த மேல் முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்து கோர்ட்டு கடந்த ஆண்டு ஏப்ரல் 20-ந் தேதி உத்தரவிட்டது.

    இதையடுத்து விஜய் மல்லையா நாடு கடத்தும் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. அவரை இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமாறு இங்கிலாந்திடம் மத்திய அரசு வலியுறுத்தியது.

    ஆனால் இங்கிலாந்து நாட்டு குடியுரிமை பெற்றுள்ள விஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் சட்ட சிக்கல்கள் உள்ளன. இது தொடர்பான வழக்கு இங்கிலாந்து நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    விஜய் மல்லையாவை நாடு கடத்தும் உத்தரவை இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் பிறப்பிக்க வேண்டும்.

    இதுகுறித்து இங்கிலாந்து அரசு கூறுகையில், “சட்டங்களுக்கு உட்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அவை முடிந்த பிறகே விஜய் மல்லையாவை நாடு கடத்த முடியும். ஆனால் அதற்கு எவ்வளவு காலமாகும் என்பதை உறுதியாக கூற முடியாது” என்று தெரிவித்தது.

    இதையடுத்து தன்னை நாடு கடத்தாமல் இங்கிலாந்தில் வசிக்க அனுமதிக்க வேண்டும் என்று விஜய் மல்லையா கோரினார். ஆனால் கோர்ட்டு அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

    இந்த நிலையில் நாடு கடத்தலில் இருந்து தப்பிக்க விஜய் மல்லையா புதிய முயற்சியை மேற்கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவர் இங்கிலாந்தில் தனக்கு தஞ்சம் அளிக்குமாறு விண்ணப்பித்துள்ளார்.

    இந்த தகவலை விஜய் மல்லையாவின் வக்கீல் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பாக வக்கீல் கூறும்போது,   “விஜய் மல்லையா தான் லண்டனில் தங்க புதிய நடவடிக்கையை இங்கிலாந்தின் உள்துறை மந்திரி ப்ரீத்தி பட்டேலிடம் விண்ணப்பித்து உள்ளார்” என்று தெரிவித்தார்.

    தஞ்சம் கோரி விண்ணப்பித்ததை விஜய் மல்லையா ரகசியமாக செய்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தவும் இல்லை. மறுக்கவும் இல்லை.

    நாடு கடத்தும் உத்தரவில் மந்திரி ப்ரீத்தி பட்டேல் கையெழுத்திடும் வரை விஜய் மல்லையா இங்கிலாந்தில் ஜாமீனில் தங்கி இருக்க முடியும்.
    Next Story
    ×