search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது

    அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் ஜேம்ஸ் பிரிட்ஜஸ் கைது செய்யப்பட்டார்.‌
    நியூயார்க்:

    அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்த 20 வயது ராணுவ வீரர் கோல் ஜேம்ஸ் பிரிட்ஜஸ். கடந்த 2019ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த இவர் அப்போது முதலே பயங்கரவாதிகளையும் அவர்களின் வன்முறை சித்தாந்தத்தையும் ஊக்குவிக்கும் ஆன்லைன் பிரசாரங்களை ஆராய்ச்சி செய்து வந்துள்ளார்.‌ இந்த நிலையில் அமெரிக்க மத்திய புலனாய்வு போலீஸ் (எப்.பி.ஐ.) பிரிவை சேர்ந்த ஊழியர் ஒருவர் தன்னை ஐ.எஸ். பயங்கரவாத ஆதரவாளர் போல சித்தரித்து இணையத்தில் பதிவுகளை வெளியிட்டு வந்தார்.

    எப்.பி.ஐ. ஊழியரை உண்மையான ஐ.எஸ். பயங்கரவாதி என நினைத்து ராணுவ வீரர் கோல் ஜேம்ஸ் பிரிட்ஜஸ் இவருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார்.‌ கடந்த அக்டோபர் மாதம் முதல் அவருடன் தொடர்பில் இருந்து வரும் கோல் ஜேம்ஸ் பிரிட்ஜஸ் அண்மையில் நியூயார்க் நகரில் உள்ள இரட்டை கோபுர தாக்குதல் நினைவிடத்தை குண்டு வைத்து தகர்க்க உள்ளதாக எப்.பி.ஐ. ஊழியரிடம் கூறினார். மேலும் நியூயார்க் நகரின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்தும் தனது சதித் திட்டம் குறித்தும் அவர் விளக்கியுள்ளார். அத்துடன் அமெரிக்க ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ராணுவ ரகசிய தகவல்களையும் அவர் வழங்கினார். இதையடுத்து அந்த எப்.பி.ஐ. ஊழியர் கோல் ஜேம்ஸ் பிரிட்ஜசின் சதித்திட்டம் குறித்து ராணுவத்துக்கு தகவல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து கோல் ஜேம்ஸ் பிரிட்ஜஸ் நேற்று கைது செய்யப்பட்டார்.‌

    இந்த சம்பவம் தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    Next Story
    ×