search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அகுவாபோனிக்ஸ் முறையில் காய்கறி செடிகள் வளர்க்கப்படுவதையும்,அதன் அருகில் மீன்தொட்டி உள்ளதையும் படத்தில் காணலாம்
    X
    அகுவாபோனிக்ஸ் முறையில் காய்கறி செடிகள் வளர்க்கப்படுவதையும்,அதன் அருகில் மீன்தொட்டி உள்ளதையும் படத்தில் காணலாம்

    அகுவாபோனிக்ஸ் முறையில் வெற்றிகரமாக பயிரிடப்பட்ட காய்கறி செடிகள்

    சார்ஜா ஆராய்ச்சி, தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு பூங்காவில் நவீன அகுவாபோனிக்ஸ் முறையில் காய்கறி செடிகள் வெற்றிகரமாக பயிரிடப்பட்டுள்ளது.
    சார்ஜா:

    பொதுவாக ஒரு தாவரம் வளர்வதற்கு மண், தண்ணீர், ஊட்டச்சத்துகள் தேவை. இதன் காரணமாக வளமில்லாத மண் அல்லது தண்ணீர் இல்லாத பகுதிகளில் தாவரங்கள் வளர்வதற்குரிய தகவமைப்பு இல்லாமல் போய்விடுகிறது. இதனால் அதுபோன்ற பகுதிகளில் பசுமை கூடாரங்கள் அமைத்து அதில் அந்த தாவரங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை மட்டும் அளித்து மண் இல்லாமல் வளர்க்க முடியும் என நவீன வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன.

    இது போல செயற்கை முறையில் குழாயில் தண்ணீர் மற்றும் ஊட்டசத்துக்களை அளித்து செடிகளை வளர்க்கும் முறைக்கு ஹைட்ரோபோனிக்ஸ் என்று பெயர். இந்த முறையில் சற்று மாற்றம் செய்யப்பட்டதுதான் அகுவாபோனிக்ஸ் முறையாகும்.

    அதாவது செடிகள் வளர்க்கப்படும் பசுமை கூடாரத்திலேயே மீன்களும் வளர்க்கப்படும். அந்த மீனின் கழிவுகள் செடிகளுக்கு உரமாக பயன்படுத்தி வளர்க்கும் முறை அகுவாபோனிக்ஸ் எனப்படுகிறது. இந்த முறையில் காய்கறி செடிகளை சார்ஜா ஆராய்ச்சி, தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு பூங்காவில் ஆராய்ச்சியாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து வெற்றிகரமாக பயிரிட்டுள்ளனர்.

    அமீரகம் வெப்பநிலை அதிகமுள்ள பகுதியாகும். மேலும் இங்குள்ள மண்ணில் தாவரங்கள் வளர்வதற்கு ஏற்ற வளங்கள் மற்றும் நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் இல்லை. எனவே இந்த முறையானது அமீரக விவசாயத்திற்கு உகந்த சிறந்த முறையாகும்.

    இந்த புதிய அகுவாபோனிக்ஸ் முறையில் பசுமை கூடாரம் ஒன்று அமைக்கப்படுகிறது. அந்த கூடாரத்தில் குறிப்பிட்ட காய்கறி செடிகள் வளர்வதற்கு தகுந்த வெப்பநிலை, ஈரப்பதம் போன்றவைகள் பராமரிக்கப்படுகிறது.

    இதில் பயிர்களை வளர்ப்பதற்கு மண் தரைக்கு பதிலாக நீளமான பி.வி.சி. குழாய்கள், அல்லது அலமாரி போன்ற அடுக்கு அமைப்புகள் பயன்படுத்தப்படுகிறது. அந்த குழாய்களில் வரிசையாக துளைகள் இடப்பட்டு அதில் இயற்கை எரு, சிறிதளவு மண் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அடங்கிய தாதுப்பொருட்கள் இடப்பட்டு நிரப்பப்படுகிறது. பிறகு அந்த துளைகளில் விதைகள் அல்லது பயிர்கள் நடப்படுகிறது.

    இதையடுத்து அருகில் வளர்க்கப்படும் மீன் தொட்டியில் இருந்து பெறப்படும் கழிவுகள் குழாய்களின் வழியே வடிகட்டப்பட்டு செடிகளுக்கு உரமாக அளிக்கப்படுகிறது. பிறகு அதில் மீதி பெறப்படும் தண்ணீர் மீண்டும் செடிகளுக்கே பாய்ச்சப்படுகிறது. இந்த முறையின் மூலமாக இயற்கையாக மீனில் உள்ள கழிவுகளை பாக்டீரியாக்கள் அம்மோனியா சத்தாக மாற்றி செடிகளுக்கு அளிக்கிறது. இந்த தொழில்நுட்பத்திற்கு சோலார் தகடுகள் அந்த வளாகத்தில் அமைக்கப்பட்டு அதன் மூலம் பெறப்படும் சூரியமின்சக்தி பயன்படுத்தப்படுகிறது. இந்த முறை குறித்து அகுவாபோனிக்ஸ் பண்ணை மேலாளர் அன்ஷு சந்தோஷ் கூறுகையில், ‘‘இந்த முறையில் இங்கு லெட்டூஸ் இலைகள், கீரை வகைகள், தக்காளி, மிளகாய், பீட்ரூட், ஸ்ட்ராபெர்ரி உள்ளிட்ட செடிவகைகள் வெற்றிகரமாக வளர்க்கப்பட்டு வருகிறது. மாற்று எரிசக்தி மூலம் குறைந்த செலவில் கோடை காலத்திலும் காய்கறிகளை எப்போதும்போல விளைவிக்கலாம்’’ என்றார்.
    Next Story
    ×