search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தாய்லாந்தில் மன்னரை அவமதித்த பெண்ணுக்கு 43½ ஆண்டுகள் சிறை

    தாய்லாந்தில் மன்னரை அவமதித்த பெண் ஒருவருக்கு 43½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தாய்லாந்து கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
    பாங்காக்:

    தாய்லாந்தில்‌ முடியாட்சியில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும், குறிப்பாக மன்னரின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் தலைமையிலான ஜனநாயக இயக்கம் தொடர்ந்து அறவழியில் போராட்டங்கள் நடத்தி வருகிறது.

    மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க தாய்லாந்து போலீசார் சர்ச்சைக்குரிய சட்டத்தை கையில் எடுத்துள்ளனர். லெஸ் மஜாஸ்ட்டே எனும் இந்த சட்டத்தின்படி அரச குடும்பத்தை எதிர்த்து யார் எந்த கருத்தை சொன்னாலும், அவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

    இந்த நிலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் லெஸ் மஜாஸ்ட்டே சட்டத்தின் கீழ் பெண் ஒருவருக்கு 43½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தாய்லாந்து கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

    முன்னாள் அரசு ஊழியரான இந்தப்பெண், மன்னரை அவமதிக்கும் விதமாக பேஸ்புக் மற்றும் யூடியூப் தளங்களில் பதிவுகளை வெளியிட்டதாக கூறி கடந்த 2015 ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

    3 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

    இவர் மீதான வழக்கை விசாரித்து வந்த தாய்லாந்து ராணுவ கோர்ட்டு இந்த வழக்கை பாங்காக் குற்றவியல் கோர்ட்டுக்கு மாற்றியது. இந்த நிலையில் இந்த வழக்கில் முன்னாள் அரசு ஊழியர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு 43½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாங்காக் குற்றவியல் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது.

    இந்த சிறை தண்டனை மன்னராட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மாணவர் அமைப்புக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×