search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஆப்கானிஸ்தானில் சக வீரர்கள் 12 பேரை சுட்டுக் கொன்ற 2 ராணுவ வீரர்கள்

    ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாமில் இருந்த 2 ராணுவ வீரர்கள் திடீரென தங்களது சக வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 12 வீரர்களும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
    காபூல்:

    ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் உள்ள ஹெரட் மாகாணத்தில் ராணுவ முகாம் ஒன்று உள்ளது. இந்த முகாமில் 14 ராணுவ வீரர்கள் தங்கியிருந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த முகாமில் இருந்த 2 ராணுவ வீரர்கள் திடீரென தங்களது சக வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.

    இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. என்ன நடக்கிறது என சக வீரர்கள் சுதாரிப்பதற்குள் அந்த 2 வீரர்களும் அவர்களை குருவியை சுடுவது போல சுட்டு தள்ளினர். இதில் 12 வீரர்களும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தனர்.

    இதையடுத்து அந்த 2 வீரர்களும், தங்களது சக வீரர்களிடம் இருந்த துப்பாக்கிகள் உள்ளிட்ட அனைத்து ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலின் பின்னணி என்ன என்பது தெரியாத நிலையில், தங்கள் அமைப்பைச் சேர்ந்த போராளிகளே ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்றதாக கூறி இந்த தாக்குதலுக்கு தலீபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

    இதற்கிடையில் தலைநகர் காபூலில் போலீஸ் வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 2 போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மேலும் ஒரு போலீஸ் அதிகாரி படுகாயம் அடைந்தார்.‌

    இதேபோல் ஹெல்மண்ட் மாகாணத்தில் போலீஸ் நிலைய வளாகத்துக்குள் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை நிறுத்தி வெடிக்க செய்ததில் ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்தார். மேலும் 2 போலீசார் படுகாயமடைந்தனர்.

    இந்த 2 குண்டு வெடிப்புகளுக்கும் உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
    Next Story
    ×