search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மைக் பென்ஸ் - கமலா ஹாரிஸ்
    X
    மைக் பென்ஸ் - கமலா ஹாரிஸ்

    அமெரிக்க துணை அதிபராக பொறுப்பேற்க உள்ள கமலா ஹாரிசுக்கு வாழ்த்து தெரிவித்த மைக் பென்ஸ்

    அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் அடுத்த துணை அதிபராக பொறுப்பேற்க உள்ள கமலா ஹாரிசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றார்.

    குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோர் தோல்வியடைந்தனர்.

    ஆனால், அதிபர் டொனால்டு டிரம்ப் தொடக்கத்தில் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக இருந்தார். இதனால், அதிபர் மற்றும் துணை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன் மற்றும்
    கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை.

    இதற்கிடையில், தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் அளிப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் கடந்த 6-ந்தேதி நடைபெற்றது.

    அப்போது நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்த டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

    இந்த விவகாரத்தை தொடர்ந்து அதிகாரத்தை கையில் எடுத்த துணை அதிபர் மைக் பென்ஸ் தேசிய பாதுகாப்பு படையினரை அமெரிக்க நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு பணியில் அமர்த்தினார்.

    அதிபர் டிரம்பின் உத்தரவின்றி துணை அதிபர் மைக் பென்ஸ் இந்த உத்தரவை பிறப்பித்தார். மேலும், அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றார் என்ற அறிவிப்பை பாராளுமன்றத்தில் பென்ஸ் உறுதிபடுத்தினார். மேலும், வரும் 20-ம் தேதி நடைபெற உள்ள பதவியேற்று விழாவிலும் மைக் பென்ஸ் பங்கேற்க உள்ளார்.

    இந்நிலையில், துணை அதிபராக பொறுப்பில் உள்ள மைக் பென்ஸ் தேர்தலில் வெற்றிபெற்று துணை அதிபராக பொறுப்பேற்க உள்ள கமலா ஹாரிசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கமலா ஹாரிசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மைக் பென்ஸ் தேர்தலில் வெற்றிபெற்றதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கமலா ஹாரிசுக்கு தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் தற்போதுவரை வாழ்த்து தெரிவிக்காத நிலையில் துணை அதிபர் மைக் பென்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ள சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது. 
    Next Story
    ×