search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    குவைத் நாட்டின் பிரதமர் திடீர் ராஜினாமா

    குவைத் நாட்டின் பிரதமர் ஷேக் சபா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
    குவைத் சிட்டி:

    மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான குவைத்தில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்தவர் ஷேக் சபா கலீத் அல் ஹமத் அல் சபா.

    கடந்த டிசம்பர் மாதம் 5-ந்தேதி குவைத்தில் பொதுத்தேர்தல் நடைபெற்றதையொட்டி பிரதமர் ஷேக் சபா தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

    தேர்தல் முடிந்து புதிய அரசு பதவியேற்றதும் ஷேக் சபாவை மீண்டும் பிரதமராக அரசர் ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா நியமித்தார்.

    இந்த நிலையில் மந்திரிசபை அமைப்பதில் தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கவில்லை என்றும் சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற குழுக்களின் உறுப்பினர்களை தேர்வு செய்வதில் அரசின் தலையீடு இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் குற்றம் சாட்டினர்.

    இது தொடர்பாக பிரதமரிடம் கேள்வி எழுப்ப கோரும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு 30-க்கும் மேற்பட்ட எம்.பி‌.க்கள் அதற்கு ஆதரவளித்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் குழப்பம் உருவானது.

    இந்த நிலையில் இந்த விவகாரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மந்திரிசபையின் மந்திரிகள் அனைவரும் கூட்டாக தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அவர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை பிரதமர் ஷேக் சபாவிடம் வழங்கினர்.

    மந்திரிகள் அனைவரும் ஒரே சமயத்தில் ராஜினாமா செய்ததால் பிரதமர் ஷேக் சபா தனது பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

    அதன்படி நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தன்னுடைய மற்றும் தனது மந்திரிகளின் ராஜினாமா கடிதங்களை அரசர் ஷேக் நவாப்பிடம் ஒப்படைத்தார்.
    Next Story
    ×