search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள்
    X
    பாராளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள்

    அமெரிக்க பாராளுமன்றத்தில் வரலாறு காணாத கலவரம்: 4 பேர் பலி- எப்.பி.ஐ. விசாரணை

    அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனின் வெற்றியை ஏற்க மறுத்து டிரம்பின் ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் 3-ந்தேதி நடந்தது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார். அவர் 306 ஓட்டுகள் பெற்றார். குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய அதிபர் டிரம்ப் (232 ஓட்டு) தோல்வியை தழுவினார். ஆனால் தேர்தலில் ஜோ பைடன் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக டிரம்ப் கூறி தனது தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை.

    இது தொடர்பாக டிரம்ப் தரப்பில் மாகாண கோர்ட்டுகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதன் மூலம் டிரம்பின் சட்ட நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தது.

    இதையடுத்து வருகிற 20-ந்தேதி ஜோ பைடன் அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவி ஏற்க உள்ளார். ஆனால் டிரம்ப் தொடர்ந்து தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் பிடிவாதம் பிடித்து வருகிறார். அதேபோல் அவரது ஆதரவாளர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஜோ பைடன் வருகிற 20-ந்தேதி பதவி ஏற்க உள்ளதால் அவரது தேர்தல் வெற்றியை உறுதி செய்வதற்கான சான்றிதழ் வழங்கும் பணிகளை பாராளுமன்றம் மேற்கொண்டு வருகிறது.

    ஜோபைடனின் வெற்றியை உறுதி செய்வதற்கான சான்றிதழை வழங்க எந்த தடையும் விதிக்கப்போவதில்லை என்று துணை அதிபர் மைக்பென்ஸ் அறிவித்தார்.

    இதையடுத்து தேர்தலில் வென்ற மாகாண சபை உறுப்பினர்கள் அதிபரை தேர்வு செய்வதற்கான தங்களது வாக்குகளை கடந்த டிசம்பர் 14-ந்தேதி செலுத்தி அவற்றை சீலிட்ட கவரில் அனுப்பி வைத்தனர்.

    அந்த வாக்குகள் எண்ணப்படுவதற்காக அமெரிக்க பாராளுமன்ற கட்டிடமான கேப்பிடல் கட்டிடத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. இதற்காக பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் செனட் உறுப்பினர்கள் ஒன்று கூடி இருந்தனர். இந்த வாக்கு எண்ணும் பணி நடைபெற்று விட்டால் ஜோ பைடன் வெற்றியாளர் என்று தீர்மானிக்கப்பட்டுவிடுவார்.

    பாராளுமன்றம் முற்றுகை

    இந்த நிலையில் பாராளுமன்றத்தில் வாக்குகள் எண்ணும் பணியை தடுக்கும் வகையில் டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பாராளுமன்றத்தை நோக்கி வந்தனர். அவர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் பாராளுமன்றத்துக்குள் நுழைய முயன்றனர்.

    இதையடுத்து அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் பாராளுமன்ற கட்டிடத்தின் அனைத்து கதவுகளையும் பூட்டி போராட்டக்காரர்களை தடுத்தனர்.

    இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட் டது. அப்போது போராட்டக்காரர்கள் பாராளுமன்றத்துக்குள் நுழைந்தனர். சிலர் கண்ணாடிகளை உடைத்தும், கட்டிடத்தின் மேல் ஏறியும் உள்ளே நுழைந்தனர்.

    இதையடுத்து பாராளுமன்றத்துக்குள் இருந்த உறுப்பினர்கள் அனைவரையும் பத்திரமாக போலீசார் வெளியேற்றினர். அதே போல் துணை அதிபர் மைக் பென்ஸ் பத்திரமாக வெளியேற்றப்பட்டார்.

    பாராளுமன்றத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த பொருட்களை அடித்து சூறையாடினார்கள்.

    டிரம்ப் ஆதரவாளர் ஒருவர், அவைத் தலைவர் நான்சியின் நாற்காலியில் அமர்ந்து காலை மேஜையில் வைத்து அட்டூழியத்தில் ஈடுபட்டார். அதே போல் மற்ற போராட்டக்காரர்களும் பாராளுமன்றத்துக்குள் கலவரத்தில் ஈடுபட்டனர். ஒவ்வொரு அறையாக சென்று பொருட்களை தூக்கி வீசினார்கள். கண்ணாடிகளை உடைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    அவர்களை போலீசார் வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். துப்பாக்கி முனையில் பலரை பிடித்து கைது செய்தனர்.

    அதேபோல் பாராளுமன்றம் முன்பு கூடியிருந்த போராட்டக்காரர்கள் உள்ளே நுழைய முயன்றனர். அவர்ளை கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

    ஆனால் அவர்கள் தொடர்ந்து பாராளுமன்ற கட்டிடத்துக்குள் நுழைய முயன்றனர். இதையடுத்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். மேலும் கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட் டன.

    இந்த துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர். கலவரத்தில் 10க்கும் மேற்பட்ட போலீசாரும் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

    சுமார் 6 மணி நேரத்துக்கு பிறகு போராட்டத்தை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்தனர். கலவரம் தொடர்பாக 52 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

    கலவரம் காரணமாக தலைநகர் வாஷிங்டன் டிசியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு 2,700 பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டுள் ளனர்.

    கலவரத்தை தொடர்ந்து டிரம்ப் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “தயவு செய்து எனது ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டும். காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். அமைதி காக்கவும்” என்று பதிவிட்டு இருந்தார்.

    மேலும் பேஸ்புக்கில் வெளியிட்ட வீடியோவில், “தனது ஆதரவாளர்கள் திரும்பி போகும்படி டிரம்ப் வேண்டுகோள்” விடுத்திருந்தார். அதே போல் தேர்த லில் முறைகேடு நடந்து விட்டதாக மீண்டும் குற்றம் சாட்டினார்.

    கலவரம் கட்டுக்குள் வந்ததையடுத்து பாராளுமன்றத்தில் வாக்குகள் எண்ணும் பணி மீண்டும் தொடரும் என்று பாராளுமன்ற பிரதிநிதிகள் அவைத்தலைவர் நான்சி பொலேசி அறிவித்தார். இதையடுத்து வாக்குகள் எண்ணும் பணி மீண்டும் தொடங்கியது.

    அப்போது பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் செனட் உறுப்பினர்கள் பேசினார்கள். துணை அதிபர் மைக்பென்ஸ் பேசும் போது, “இங்கு நடந்த வன்முறை சம்பவங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். வன்முறை எப்போதும் வெற்றி பெறாது. நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள். சுதந்திரம்தான் வெற்றி பெறும்” என்றார்.

    இதே போல் மற்ற உறுப்பினர்களும் பேசினார்கள். பாராளுமன்றத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத கலவரம் காரணமாக அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கலவரம் தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை விசாரணையை தொடங்கி உள்ளது.
    Next Story
    ×