search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் போரிஸ் ஜான்சன்
    X
    பிரதமர் போரிஸ் ஜான்சன்

    இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு அமல் - போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

    கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பின் எதிரொலியாக இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
    லண்டன்:

    இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு முக்கிய நகரங்களில் 4 அடுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ் அந்நாட்டுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. கடந்த சில தினங்களாக 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா
    தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், வரும் வாரங்களில் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரிட்டன் தற்போது 5-வது இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 58,784 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. அங்கு தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 27,13,563 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 407 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 75,431 ஆக அதிகரித்துள்ளது. 

    இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பின் எதிரொலியாக இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் போரிஸ் ஜான்சன் மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனவே நாட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே பத்திரமாக இருக்க வேண்டும்.

    இந்த ஊரடங்கின் புதிய விதிமுறைகளை இன்று முதல் பின்பற்ற வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இந்த ஊரடங்கில் இருந்து சிலருக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. அவை:

    கட்டுமானத் துறையில் உள்ளவர்கள் அல்லது அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வெளியே செல்லலாம்.

    உணவு, மருந்துகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே ஷாப்பிங் செய்யலாம். பாதிக்கப்படும் மக்களுக்கு பாதுகாப்பு அல்லது உதவியை வழங்க வெளியே செல்லலாம்.

    மருத்துவம் தொடர்பான பணிகளுக்கு வெளியே செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

    மேலும், தொடக்கப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நாளை முதல் ஆன்லைனில் பாடம் நடத்த வேண்டும்.

    மருத்துவ ரீதியாக பாதிக்கப்படக்கூடியோர் முடிந்தவரை வீட்டிலேயே இருக்க வேண்டும். அவர்கள் உடற்பயிற்சி அல்லது மருத்துவ சந்திப்புக்கு மட்டுமே வெளியே செல்லவேண்டும்.

    அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    இந்த ஊரடங்கு பிப்ரவரி மாதத்தின் நடுப்பகுதி வரை அமலில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே 4 அடுக்கு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தற்போது 5-வது அடுக்கு ஊரடங்கு அமலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×