search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜாகியுர் ரஹ்மான் லக்வி
    X
    ஜாகியுர் ரஹ்மான் லக்வி

    மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானில் கைது

    மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளான்.
    லாகூர்: 

    இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி கடல் வழியாக நுழைந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை அரங்கேற்றினர். 

    லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த அவர்கள் நடத்திய இந்த கொடூர தாக்குதலில் வெளிநாட்டினர் உள்பட 166 பேர் உயிரிழந்தனர், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    சுமார் 4 நாட்கள் நடந்த இந்த தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதியும் பின்னர் தூக்கிலிடப்பட்டான்.

    மும்பையில் நடந்த இந்த தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவு முற்றிலும் சீர்குலைந்தது. இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தியது. இதைப்போல பல்வேறு உலக நாடுகளும் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்தன.

    இதன் விளைவாக லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவன் ஹபீஸ் சையது, தளபதி ஜாகியுர் ரஹ்மான் லக்வி உள்பட 7 பேரை பாகிஸ்தான் அரசு கைது செய்தது. 

    ஜாகியுர் ரஹ்மான் லக்வி

    இதில் லக்வி, கடந்த 2015-ம் ஆண்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டான். இதற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்திருந்தது. அதேபோல் ஹபீஸ் சையதுவும் சிறையில் வைக்கபடாமல் வீட்டுக்காவலில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளான்.

    இதற்கிடையில், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதி ஜாகியுர் ரஹ்மான் லக்வி பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் இருந்தன.

    இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில், பயங்கரவாத செயல்களுக்காக நிதி திரட்டியதற்கான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் கிடைத்ததையடுத்து, மும்பை தாக்குதல் குற்றவாளியான பயங்கரவாதி ஜாகியுர் ரஹ்மான் லக்வியை லாகூர் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

    61 வயதான ரஹ்மான் லக்வி பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டி வருவது உளவுத்துறையின் ரகசிய விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், அந்த ஆதாரத்தின் அடிப்படையில் ரஹ்மான் லக்வி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி லக்வி லாகூரில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். 
    Next Story
    ×