search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார் வெடித்து சிதறிய பகுதி
    X
    கார் வெடித்து சிதறிய பகுதி

    அமெரிக்காவில் திடீரென வெடித்து சிதறிய காரால் பரபரப்பு

    கிறிஸ்துமஸ் தினமான இன்று அமெரிக்காவில் கார் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
    வாஷிங்டன்:

    உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்காவிலும் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையில், அமெரிக்காவின் டென்னிசி மாகாணம் நஷ்விலி நகரில் உள்ள சர்ஜ் தெரு-கமர்ஸ் தெருவுக்கு இடைப்பட்ட பகுதியில் உணவகங்களும், கேளிகை விடுதிகளும் உள்ளது. வழக்கமாக இந்த பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும்.

    இந்நிலையில், இன்று அதிகாலை அப்பகுதியில் அமைந்துள்ள உணவகம் அருகே சந்தேகத்திற்கு இடமாக ஒரு கார் நின்றுகொண்டிருந்தது. இதையடுத்து, உடனடியாக அப்பகுதியில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கார் சந்தேகத்திற்கு இடமாக நிற்பதால் அதில் ஏதேனும் வெடிபொருட்கள் இருக்கலாம் என சந்தேகித்தனர். உடனடியாக அப்பகுதியில் இருந்தவர்களை சற்று தொலைவில் செல்லுமாறு அறிவுறுத்திய போலீசார் வெடிகுண்டு தடுப்பு பிரிவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    ஆனால், வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் வருவதற்கு முன்னதாகவே சரியாக 6.40 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி) அந்த கார் திடீரென வெடித்துச்சிதறியது.

    இதனால், உணவகங்கள், கேளிக்கை விடுதிகளின் கண்ணாடி ஜன்னல்கள் சிதறின. மேலும், இந்த சம்பவத்தில் போலீஸ் உள்பட 4 பேருக்கு காயம் ஏற்பட்டது.

    கார் வெடித்து சிதறிய சம்பவம் குறித்து அந்நாட்டு தேசிய புலனாய்வு அமைப்பான (எஃப்டிஐ) விசாரணையை தொடங்கியுள்ளது. முதல்கட்ட விசாரணையில், கார் வெடித்து சிதறியது திட்டமிடப்பட்ட தாக்குதலுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அந்நாட்டில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டது.

    கிறிஸ்துமஸ் தினத்தில் கார் வெடித்து சிதறிய நடந்த சம்பவத்தால் அமெரிக்காவில் உச்சபட்ச பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×