search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்மா ஒலி, பிரசந்தா
    X
    சர்மா ஒலி, பிரசந்தா

    பாராளுமன்றம் கலைப்பால் மோதல்: நேபாளத்தில் கம்யூனிஸ்டு கட்சி இரண்டாக உடைந்தது

    நேபாளத்தில் பிரதமரின் பரிந்துரையின்படி பாராளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆளுங்கட்சியான கம்யூனிஸ்டு கட்சி இரண்டாக உடைந்தது.

    காத்மாண்டு:

    நேபாளத்தில் கடந்த 2018-ம் ஆண்டு கே.பி.சர்மா ஒலி தலைமையிலான சி.பி.என்.யூ. எம்.எல். மற்றும் முன்னாள் பிரதமர் புஷ்பகமால் பிரசந்தா தலைமையிலான சி.பி.என். மாவோயிஸ்டு மையம் இணைந்து நேபாள கம்யூனிஸ்டு கட்சி உருவாக்கப்பட்டது.

    தேர்தலில் வென்றதை அடுத்து பிரதமராக கே.பி. சர்மா ஒலி பதவி ஏற்றார். மேலும் அவர் கட்சி தலைவராகவும் பதவி ஏற்றார். கட்சியின் துணைத் தலைவராக பிரசந்தா பொறுப்பேற்றார்.

    இந்தநிலையில் சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு எதிராக பிரதமர் சர்மா ஒலி கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு பிரசந்தா தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.

    இந்தநிலையில் கடந்த 20-ந்தேதி கே.பி.சர்மா ஒலி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பாராளுமன்றத்தை முன் கூட்டியே கலைக்க பரிந்துரைக்கப்பட்டது. இதை ஏற்று அதிபர் உடனடியாக பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார்.

    பாராளுமன்றத்தை முன் கூட்டியே கலைக்கப்பட் டதற்கு நேபாள கம்யூனிஸ்டு கட்சியில் கடும் அதிருப்தி எழுந்து இருக்கிறது. இதையடுத்து அக்கட்சி இரண்டாக உடையும் சூழ்நிலை உருவானது. இதனால் சர்மா ஒலி தலைமையில் நடந்த கூட்டத்தில் கட்சிக்கு 1,199 உறுப்பினர்கள் அடங்கிய புதிய பொதுக்குழு அமைக்கப்பட்டது.

    இதற்கு பதிலடியாக பிரசந்தா தலைமையில் நடந்த கூட்டத்தில் கட்சி தலைவர் பதவியில் இருந்து சர்மா ஒலி நீக்கப்பட்டார். புதிய தலைவராக மாதவ் நியமிக்கப்பட்டார்.மேலும் சர்மா ஒலி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்தநிலையில் பிரசந்தா தலைமையில் நேபாள கம்யூனிஸ்டு கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து சர்மா ஒலி நீக்கப்பட்டார். புதிய தலைவராக பிரசந்தா தேர்வு செய்யப்பட்டார்.

    இதுகுறித்து அவர் கூறும்போது, ‘பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை ரத்து செய்து புதிய அரசு அமைப்பதுதான் எனது முதல் பணியாக இருக்கும்’ என்றார்.

    இதற்கிடையே பிரசந்தா தரப்பினர் தேர்தல் ஆணையத்தை சந்தித்து நேபாள கம்யூனிஸ்டு கட்சியில் தங்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு உள்ளது என்றும் எனவே தங்கள் பிரிவை தான் நேபாள கம்யூனிஸ்டு கட்சியாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதனால் நேபாள கம்யூனிஸ்டு கட்சி சர்மா ஒலி மற்றும் பிரசந்தா தலைமையில் இரண்டாக உடைந்து இருக்கிறது.

    Next Story
    ×