search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாங்கே-5 விண்கலம்
    X
    சாங்கே-5 விண்கலம்

    சாங்கே-5 விண்வெளி பயணம் - விஞ்ஞானிகளுக்கு அதிபர் ஜின்பிங் பாராட்டு

    மண்ணையும், பாறைத்துகளையும் சேகரித்துக்கொண்டு, சீன விண்கலம் நிலவில் இருந்து பூமிக்கு பத்திரமாக திரும்பி இருக்கிறது. இதற்காக விஞ்ஞானிகளை சீன அதிபர் ஜின்பிங் பாராட்டி உள்ளார்.
    பீஜிங்:

    சீனா தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களில் கூடுதலான ஆர்வம் காட்டி வருகிறது.அந்த வகையில் சீனா கடந்த மாதம் 24-ந் தேதி சாங்கே-5 என்ற விண்கலத்தை வென்சாங் விண்வெளி தளத்தில் இருந்து நிலவுக்கு அனுப்பி வைத்தது.

    இந்த விண்கலம், கடந்த 1-ந் தேதி வெற்றிகரமாக நிலவை சென்று அடைந்தது.

    அந்த விண்கலத்தின் லேண்டர் நிலவில் தரையிறங்கி அதன் மேற்பரப்பில் இருந்து பாறைத்துகள், மண் போன்ற மாதிரிகளை சேகரித்தது. அதன்பின்னர் அந்த லேண்டர், விண்கலத்தின் ஆர்பிட்டருடன் சேர்ந்தது.

    இந்த லேண்டர் சேகரித்த நிலவின் மேற்பரப்பின் பாறைத்துகள், மண் போன்ற மாதிரிகள் சுமார் 4 கிலோ வரையிலான எடையை கொண்டிருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.

    இந்த மாதிரிகளை சுமந்து கொண்டு, சாங்கே-5 விண்கலம் நேற்று உள்ளூர்நேரப்படி அதிகாலை 1.59 மணிக்கு சீனாவின் இன்னர்மங்கோலியாவில் சிசிவாங் பேனரில் பூமியில் தரை இறங்கியதாக சீன தேசிய விண்வெளி நிர்வாகம் சி.என்.எஸ்.ஏ. தெரிவித்தது. இந்த விண்கலத்தை விஞ்ஞானிகள் பாராசூட் துணையுடன் தரை இறக்கியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கடைசியாக அமெரிக்காவின் அப்பல்லோ மற்றும் ரஷியாவின் லுனா விண்கலங்கள் நிலவுக்கு சென்று மாதிரிகளை சேகரித்து வந்து 40 ஆண்டுகளாகி விட்டன.

    எனவே 40 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது முதல்முறையாக சீன விண்கலம் நிலவின் மாதிரிகளை சேகரித்து வந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    நிலவின் இந்த புதிய மாதிரிகள், ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.

    சீன விண்கலத்தின் நிலவு பயணம் குறித்து சீன தேசிய விண்வெளி நிர்வாகத்தின் தலைவர் ஜாங் கெஜியன் கூறும்போது, “சீனாவின் சாங்கே-5 விண்கலத்தின் நிலவு பயணம் வெற்றி அடைந்துள்ளது. இது சீனாவின் தற்போதைய 3 படி நிலவு ஆய்வு திட்டத்தின் சுற்றுப்பாதை, தரையிறக்கம் மற்றும் மாதிரிகளை சேகரித்து கொண்டு வருதல் ஆகியவற்றின் வெற்றிகரமான முடிவை குறிக்கிறது” என குறிப்பிட்டார்.

    இந்த சாங்கே-5 விண்கலத்தின் நிலவு பயணம் வெற்றி அடைந்திருப்பதற்கு சீன கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சீன அதிபர் ஜின்பிங், திட்ட விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

    சீனாவின் மிகவும் சிக்கலான விண்வெளி திட்டத்தின் சாங்கே-5 விண்கலம், வேற்றுகிரகத்தை அடைந்து, வெற்றிகரமாக திரும்பி உள்ளது. இந்த குறிப்பிடத்தக்க சாதனைகள் எப்போதும் நம் நாட்டினாலும், மக்களாலும் நினைவில் வைக்கப்படும்.

    விண்வெளி ஆராய்ச்சியைப் பொறுத்தமட்டில் அதற்கு முடிவே கிடையாது. இந்த திட்டத்தில் பங்கேற்றவர்கள், இந்த வெற்றி மனப்பான்மையை மனதில் கொண்டு, விண்வெளி ஆராய்ச்சி பற்றிய தங்கள் கனவுகளை தொடரவும், மேலும் ஆராய்ச்சிகளை நடத்த துணியவும், அதனால் ஏற்படக்கூடிய சிரமங்களை சமாளிக்கவும், ஒத்துழைக்கவும், வெற்றி பெறவும் வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    சாங்கே-5 விண்கலம் எடுத்து வந்துள்ள நிலவின் மாதிரிகளை விஞ்ஞானிகள் நவீன பகுப்பாய்வு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, கடந்த 100 கோடி ஆண்டுகளில் நேரிட்ட எரிமலை நடவடிக்கைகள், விண்கல் தாக்கங்களின் மர்மங்களை அவிழ்க்க முடியும் என்று கூறப்படுகிறது.
    Next Story
    ×