search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜெர்மனியில் மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது

    ஜெர்மனியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நேற்று முதல் அங்கு மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது
    பெர்லின்:

    சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் ஓராண்டாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தக் கொடிய வைரஸ் சீனாவுக்கு வெளியே முதன் முதலில் ஐரோப்பிய நாடுகளில்தான் பரவியது.

    அதிலும் குறிப்பாக இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டன. எனினும் மே மாதத்துக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவலின் தாக்கம் சற்று குறைந்தது.

    இதனை தொடர்ந்து பொருளாதார நெருக்கடியை சரி செய்யும் விதமாக ஐரோப்பிய நாடுகள் கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தின.

    இந்தசூழலில் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரசின் 2-வது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது.

    குறிப்பாக ஜெர்மனியில் கொரோனா வைரசின் முதல் அலையை விட 2-வது அலை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அங்கு இந்த வைரஸ் தினம்தோறும் ஆயிரக்கணக்கானேரை தாக்கி வருவதோடு நூற்றுக்கணக்கானோரின் உயிரையும் பறித்து வருகிறது.

    இதனிடையே கொரோனா பரவலை தடுக்கக் கட்டுப்பாடுகளை அதிகரிக்குமாறு மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதுகுறித்து அவர்கள் ‘‘கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதையும் விட அதிகமாக உள்ளது.

    அவை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நிலைமை மோசமடைந்து கொண்டே போகும் அபாயம் உள்ளது. இது தொற்று நோயையும் அதன் விளைவுகளையும் சமாளிப்பதை மேலும் மேலும் கடினமாக்கும்’’ என எச்சரித்தனர்.

    இதனைத் தொடர்ந்து கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது குறித்து ஜெர்மனி அரசு தீவிரமாக ஆலோசித்து வந்தது. இதில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து இந்த முழு ஊரடங்கு டிசம்பர் 16-ந் தேதி தொடங்கி ஜனவரி 10-ந் தேதி வரை அமலில் இருக்கும் என ஜெர்மனி அரசு அறிவித்தது.

    அத்துடன் இந்த முழு ஊரடங்கு, முன்னர் இருந்ததை விட கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டிருக்கும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் அரசு அறிவித்தபடி ஜெர்மனியில் நேற்று முதல் நாடு தழுவிய முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.

    இந்த புதிய கட்டுப்பாடுகளின் படி நாடு முழுவதும் சூப்பர் மார்க்கெட் போன்ற மிகவும் அத்தியாவசியமான கடைகள் மட்டுமே திறந்திருக்கும். ஓட்டல்கள், மதுபான விடுதிகள், ஓய்வு விடுதிகள் உள்ளிட்டவை கட்டாயம் அடைக்கப்பட்டிருக்கும்.

    அதேபோல் மக்களின் பணத் தேவைக்காக வங்கிகள் திறந்திருக்கும் என்றும், பள்ளி கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கிறிஸ்துமஸ் பண்டிகை விரைவில் கொண்டாடப்பட உள்ள நிலையில் ஜெர்மனியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது மக்களின் வசதிக்காக ஊரடங்கில் ஒரு சில தளர்வுகளை அரசு அறிவிக்கும் என்று தெரிகிறது.

    இதற்கிடையில் அமெரிக்காவின் பைசர் நிறுவனத்துடன் ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு விரைவாக ஒப்புதல் அளிக்கும்படி ஐரோப்பிய மருந்துகள் ஆணையத்துக்கு ஜெர்மனி அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது.

    இந்த தடுப்பூசி அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளில் ஏற்கனவே மக்களின் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது என்பதும், மேலும் பல நாடுகள் இந்த தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×