search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளத்தாக்கு பகுதியில் சிக்கிக்கொண்ட 9 பேரை படத்தில் காணலாம். அருகில் உள்ளூர் மக்கள் உள்ளனர்.
    X
    பள்ளத்தாக்கு பகுதியில் சிக்கிக்கொண்ட 9 பேரை படத்தில் காணலாம். அருகில் உள்ளூர் மக்கள் உள்ளனர்.

    சாகச பயணத்தில் வழி மாறி சென்றவர்கள் 13 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்பு

    ராசல் கைமா மலைப்பகுதியில் சாகச பயணத்திற்காக சென்ற ஆசிய மற்றும் அரபு நாடுகளைச் சேர்ந்த 9 பேர் வழி தெரியாமல் சிக்கிக்கொண்டனர். அவர்களை போலீசார் 13 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர்.
    ராசல் கைமா:

    ராசல் கைமா பகுதியில் ஹஜார் மலைத்தொடர் பகுதி உள்ளது. அதில் உள்ள ஜெபல் ஜைஸ் மலைப்பகுதி மிகவும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இந்த மலைப்பகுதியில் சுற்றுலா பயணிகள் மற்றும் வசிக்கும் பொதுமக்கள் சாகச பயணத்திற்காக அதிக அளவில் வருகின்றனர்.

    பயிற்சி பெற்றவர்கள் முன்னேற்பாடுகளுடன் வருகை புரிகின்றனர். புதிதாக செல்பவர்கள் முன் ஏற்பாடுகள் எதுவும் இல்லாமல் சென்று வருகின்றனர். இதன் காரணமாக மலைப்பகுதியில் பல்வேறு இடர்பாடுகளுக்கு உள்ளாகின்றனர். பலர் கீழே சறுக்கி விழுந்து காயமடைகின்றனர். மேலும், பலர் வழி தெரியாமல் பள்ளத்தாக்குகளில் சிக்கிக்கொள்வது வாடிக்கையாகி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று அந்த மலைப்பகுதியில் ஆசியா மற்றும் அரபு நாடுகளை சேர்ந்த 9 பேர் சாகச பயணத்திற்காக சென்றுள்ளனர். பொதுவாக மலைப்பகுதியில் செல்லும்போது வரைபடம், திசைகாட்டும் கருவி, முதலுதவி பொருட்கள், தண்ணீர், உணவு ஆகியவைகளை தேவையான அளவு எடுத்து செல்ல வேண்டும். ஆனால், அவர்கள் முன்னேற்பாடு எதுவும் இல்லாமல் சென்றுள்ளதாக தெரிகிறது.

    இந்த நிலையில் மலையில் ஏறி சென்று கொண்டு இருக்கும்போது திசை மாறி போய்விட்டனர். வழி தெரியாததால் வெகு தொலைவு சென்று சிக்கிக்கொண்டனர். இதன் காரணமாக தங்களை மீட்கக்கோரி ராசல் கைமா போலீஸ் கட்டுப்பாட்டு மையத்திற்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

    தகவலை பெற்றுக்கொண்ட போலீசார் அவர்கள் கூறிய அடையாளங்கள் மற்றும் ஜி.பி.எஸ். தொழில்நுட்ப கருவி உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவ்வளவு எளிதாக போலீசாரால் 9 பேர் சிக்கியுள்ள இடத்தை நெருங்க முடியவில்லை. ஒரு வழியாக உள்ளூர் மக்கள் உதவியுடன் 13 மணி நேர தேடுதல் வேட்டையில் வாதி நக்ப் என்ற ஆழமான பள்ளத்தாக்கு பகுதியில் 9 பேரும் தண்ணீர், உணவின்றி 24 மணி நேரத்திற்கும் மேலாக தவித்து மிகவும் பலவீனமாக இருந்ததை கண்டுபிடித்தனர். அவர்களை போலீசார் பத்திரமாக மீட்டு உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ராசல் கைமா மத்திய செயல்பாட்டு பிரிவின் பொது இயக்குனர் டாக்டர் முகம்மது அல் ஹுமைதி கூறும்போது, “மலைப்பகுதியில் சாகசகத்தில் ஈடுபடுபவர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் முன்கூட்டியே செய்து கொண்டு செல்ல வேண்டும். இல்லையென்றால் வாகனத்தில் சென்று மலை உச்சியை அடையலாம்” என கூறினார்.
    Next Story
    ×