search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பைசர்
    X
    பைசர்

    636 அமெரிக்க ஆஸ்பத்திரிகளுக்கு ‘பைசர்’ கொரோனா தடுப்பூசிகளை அனுப்பும் பணி தொடங்கியது

    அமெரிக்கர்களுக்கு போடுவதற்காக 636 ஆஸ்பத்திரிகளுக்கு ‘பைசர்‘ நிறுவன கொரோனா தடுப்பூசிகளை அனுப்பும் பணி தொடங்கியது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவை சேர்ந்த ‘பைசர்‘ நிறுவனமும், ஜெர்மனியை சேர்ந்த ‘பயோன்டெக்‘ நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. அமெரிக்காவில் இதன் அவசர பயன்பாட்டுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் துறை கடந்த 11-ந் தேதி ஒப்புதல் அளித்தது.

    அமெரிக்காவில், 16 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு இதை போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா முழுவதும் தடுப்பூசி போடும் மையங்களாக 636 ஆஸ்பத்திரிகள் மற்றும் கிளினிக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

    இந்தநிலையில், மிச்சிகனில் உள்ள ‘பைசர்‘ நிறுவனத்தின் தடுப்பூசி உற்பத்தி ஆலையில் இருந்து தடுப்பூசிகளை அனுப்பி வைக்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. தலா 5 டோஸ்கள், ஒவ்வொரு சிறிய புட்டியிலும் அடைக்கப்பட்டுள்ளன.

    இவ்விதம் 1 லட்சத்து 84 ஆயிரத்து 275 புட்டிகள், 189 பெட்டிகளில் அடைக்கப்பட்டு, சரக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த வாகனங்கள், நேற்று 50 மாகாணங்களையும் சென்றடைந்தன.

    நேற்று 3 லட்சத்து 90 ஆயிரம் புட்டிகள் அடங்கிய சுமார் 400 பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இவை இன்று (செவ்வாய்க்கிழமை) சென்றடையும் என்று தெரிகிறது. 636 ஆஸ்பத்திரிகளுக்கும் இந்த வாரத்துக்குள் இந்த தடுப்பூசிகள் வினியோகிக்கப்பட்டு விடும்.

    இந்த வாரத்தில் 29 லட்சம் டோஸ்களும், இந்த ஆண்டு இறுதிக்குள் 1 கோடியே 40 லட்சம் டோஸ்களும் வினியோகிக்க திட்டமிட்டுள்ளதாக தடுப்பூசி திட்டத்தின் தலைமை ஆலோசகர் மான்செப் ஸ்லாக்கி தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறியதாவது:-

    அடுத்த மாதம், 5 கோடி முதல் 10 கோடி டோஸ்வரையும், பிப்ரவரி மாதம் அதே எண்ணிக்கையிலும் தடுப்பூசி வினியோகிக்கப்படும்.

    எனவே, 10 கோடி பேருக்கு தடுப்பூசி போட முடியும். நீண்டகால சிகிச்சையில் இருப்போர், இதர நோய்களை கொண்ட முதியோர், முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி போடப்படும்.

    மக்களிடையே ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்வரை 75 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடுவது அவசியம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×