search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிரவ் மோடி
    X
    நிரவ் மோடி

    நிரவ் மோடியை நாடு கடத்துவது எப்போது? -லண்டன் கோர்ட்டில் ஜனவரியில் இறுதிக்கட்ட விசாரணை

    நிரவ் மோடியை நாடு கடத்துவது தொடர்பான வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    லண்டன்:

    இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவும், பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நிரவ் மோடியும் பிரிட்டனுக்கு தப்பி ஓடினர். இந்தியாவின் கோரிக்கையின் பேரில் அங்கு கைது செய்யப்பட்ட அவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தும் சட்ட நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

    இதில் ஜாமீனில் வெளியில் இருக்கும் விஜய் மல்லையாவின் சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் முடிவடைந்து உள்ளன. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதைப்போல லண்டன் வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தக்கோரும் வழக்கு வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

    இந்நிலையில், நிரவ் மோடியை நாடு கடத்தக்கோரும் வழக்கு நேற்று வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. நிரவ் மோடி லண்டன் வாண்ட்ஸ்வொர்த் சிறையில் இருந்தபடி காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது நீதிமன்றக் காவலை மேலும் 28 நாட்களுக்கு அதாவது, டிசம்பர் 29ம் தேதி வரை நீடித்து நீதிபதி உத்தரவிட்டார். 

    அத்துடன் இந்த வழக்கின் இறுதிக்கட்ட வாதங்கள் வரும் ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாட்களிலும் இரு தரப்பு வாதங்களை மாவட்ட நீதிபதி சாமுவேல் கூஸ் பதிவு செய்கிறார். இறுதிக்கட்ட வாதங்களைத் தொடர்ந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்படும். அதன்பின்னர் வாதப் பிரதிவாதங்களை ஆராய்ந்து சில வாரங்களில் நீதிபதி தீர்ப்பு வழங்குவார். 

    விஜய் மல்லையா, நிரவ் மோடி ஆகியோரை நாடு கடத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு பிரிட்டனுக்கு இந்தியா வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×