search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீரா தாண்டன்
    X
    நீரா தாண்டன்

    இந்திய பெண் நீரா தாண்டனை அமெரிக்க நிதிநிலைக்குழு தலைவராக நியமிக்க குடியரசு கட்சியினர் எதிர்ப்பு

    இந்திய பெண் நீரா தாண்டனை அமெரிக்க நிதிநிலைக்குழு தலைவராக நியமிக்க குடியரசு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    வாஷிங்டன்:

    அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் தனது நிர்வாகத்தின் சில முக்கிய பொறுப்புகளுக்கு இந்திய வம்சாவளியினரை தேர்வு செய்து வருகிறார்.

    அந்த வகையில் வெள்ளை மாளிகையின் அதிகாரமிக்க பதவியான மேலாண்மை மற்றும் நிதி குழுவின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணான நீரா தாண்டனை நியமிக்க ஜோ பைடன் முடிவு செய்துள்ளார்.

    இவரது நியமனத்துக்கு செனட் சபையின் ஒப்புதல் அவசியம் ஆகும். ஒருவேளை செனட் சபை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் அமெரிக்காவின் நிதிநிலை குழு தலைவராக பொறுப்பேற்கும் முதல் பெண் என்கிற பெருமையை நீரா தாண்டன் பெறுவார்.

    இந்த நிலையில் நீரா தாண்டனை மேலாண்மை மற்றும் நிதி குழுவின் தலைவராக நியமிப்பதற்கு குடியரசு கட்சியைச் சேர்ந்த செனட்சபை உறுப்பினர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நீரா தாண்டன் கடந்த காலங்களில் ஜனாதிபதி டிரம்ப் மற்றும் குடியரசு கட்சியின் செனட் சபை உறுப்பினர்களை கடுமையான சொற்களால் விமர்சனம் செய்தது இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

    குடியரசு கட்சியைச் சேர்ந்தவரும் செனட் சபையில் செல்வாக்குமிக்க உறுப்பினருமான ஜான் கார்னின் இதுகுறித்து கூறுகையில் “ஜோ பைடனின் மிகவும் மோசமான வேட்பாளராக நீரா தாண்டனை நான் பார்க்கிறேன். செனட் சபையில் பல உறுப்பினர்களை பற்றி அவர் அவமதிக்கும் கருத்துகளை முன்வைத்துள்ளார். குறிப்பாக குடியரசு கட்சியினரிடம் அவர் மிகவும் மோசமாக நடந்து கொண்டுள்ளார். எனவே அவரது நியமனம் ஒரு சிக்கலான பாதையை தான் உருவாக்கும். அவர் குடியரசு கட்சி உறுப்பினர்களுடன் சேர்ந்து பணியாற்ற மாட்டார்” எனக் கூறினார்.

    Next Story
    ×