search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முகமது பின் சல்மான் - பெஞ்சமின் நெதன்யாகு
    X
    முகமது பின் சல்மான் - பெஞ்சமின் நெதன்யாகு

    இஸ்ரேல் பிரதமர் - சவுதி பட்டத்து இளவரசர் ரகசிய சந்திப்பு?

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    ஜெருசலேம்:

    இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த மோதலை தனிக்கும் விதமாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 

    அதன் பயனாக 1979 ஆம் ஆண்டு எகிப்தும், 1994 ஆம் ஆண்டு ஜோர்டானும் இஸ்ரேலுடம் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டன. மேலும், இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்தன.

    ஆனால், பிற அரபு வளைகுடா நாடுகள் இஸ்ரேலுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்தன. மேலும், இஸ்ரேலை ஒரு தனிநாடாக ஏற்றுக்கொள்ளாமலும், அந்நாட்டுடன் பொருளாதாரம், ராஜாங்கம், தூதரகம் உள்பட எந்த வித உறவுகளையும் ஏற்படுத்தாமல் இருந்தன.

    ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் முயற்சியால் ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், சூடான் ஆகிய அரபு நாடுகள் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டன. 

    மேலும், இஸ்ரேலை தனி நாடாக அங்கீகரித்து அந்நாட்டில் தங்கள் தூதரகங்களை அமைக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளன. மேலும்,
    இஸ்ரேலுடன் சுமூக உறவை மேற்கொள்ளும் வகையில் வர்த்தகம், சுற்றுலா, தொழில்நுட்பம் உள்பட பல்வேறு விவகாரங்களில் இணைந்து செயல்பட சம்மதம் தெரிவித்துள்ளன.

    இதற்கிடையில், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைனை தொடர்ந்து சவுதி அரேபியாவும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

    இந்த தகவலை உறுதிபடுத்தும் வகையில் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ரகசியமாக சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அரசு முறைபயணமாக கடந்த 20-ம் தேதி அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ இஸ்ரேல் வந்திருந்தார். இவர் தனது பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த 22-ம் தேதி இஸ்ரேலில் இருந்து புறப்பட்டார். அவர் சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்திக்க சவுதி பயணம் மேற்கொண்டார்.

    இந்நிலையில், மைக் பாம்பியோ சவுதி சென்ற பின்னர் அவரை தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனி விமானம் மூலம் ரகசியமாக சவுதி சென்றதாக இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    கடந்த 22-ம் தேதி இரவு 7.30 மணியளவில் இஸ்ரேலின் டெல் அவிவில் இருந்து ஒரு விமானம் சவுதி அரேபியாவின் நியோம் நகருக்கு சென்றுள்ளது. 

    அந்த விமானத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின், இஸ்ரேல் உளவுத்துறையான மோசாட்டின் தலைவர் யோச்சி சோஹியன் உள்பட சில முக்கிய தலைவர்கள் மட்டுமே பயணித்துள்ளனர். 

    அவர்கள் சவுதியின் நியோம் நகரில் தங்கி இருந்த சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை ரகசியமாக சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோவும் உடன் இருந்துள்ளார்.

    பெஞ்சமின் நெதன்யாகு - முகமது பின் சல்மான் சந்திப்பில் இஸ்ரேல் - சவுதி அரேபியா இடையேயான உறவை சுமூகப்படுத்துவது, அமைதி ஒப்பந்தத்தில் ஈடுபடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அரேபிய பிராந்தியத்தில் ஈரானின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தை முடிந்துக்கொண்டு பிரதமர் நெதன்யாகு இரவு 1 மணியளவில் இஸ்ரேல் வந்தடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு - சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் சந்திப்பு நடைபெற்றதாக கூறப்பட்டு வரும் நிலையில் ஈரானின் மிகமுக்கிய அணு விஞ்ஞானி நேற்று மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலைக்கு இஸ்ரேல் தான் காரணம் என ஈரான் குற்றம்சுமத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.       

    அடுத்தடுத்த நிகழ்வுகளால் அரேபிய வளைகுடா நாடுகளுக்கு இடையே பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. 
    Next Story
    ×