search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அபுதாபி பட்டத்து இளவரசருடன் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு
    X
    அபுதாபி பட்டத்து இளவரசருடன் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

    அபுதாபி பட்டத்து இளவரசருடன் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

    இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் அபுதாபி பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யானை அல் சாத்தி அரண்மனையில் நேற்று சந்தித்து பேசினார்.
    அபுதாபி:

    இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் 6 நாட்கள் சுற்றுப்பயணமாக 3 நாடுகளுக்கு செல்கிறார். இதில் முதலாவதாக பக்ரைன் நாட்டிற்கு நேற்று முன்தினம் சென்றார்.

    பக்ரைன் நாட்டிற்கு சென்ற அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் கலீபா பின் சல்மான் அல் கலீபாவுக்கு தற்போதைய பிரதமர் சல்மான் பின் ஹமத் அல் கலீபாவை சந்தித்து இரங்கல் தெரிவித்தார்.

    பின்னர் அமீரகத்திற்கு வந்த அவர் நேற்று காலை அபுதாபியில் உள்ள அல் சாத்தி அரண்மனையில் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யானை சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பல்வேறு பிரதேச ரீதியிலான விவகாரங்கள் பேசப்பட்டது.

    மேலும் இருநாடுகளின் நட்புறவை வலுப்படுத்தும் வகையில் அரசியல், முதலீடு மற்றும் பொருளாதாரத் துறைகளில் மேற்கொள்ளும் ஒத்துழைப்பு குறித்து விரிவாக பேசப்பட்டது. அதேபோல் இருதலைவர்களும் அமீரகம், இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நிலைகள் குறித்து பேசினர். அதுமட்டுமல்லாமல் அதில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டது.

    குறிப்பாக கொரோனா தொற்றை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்தும் முயற்சிகளை பற்றி இருவரும் விவாதித்தனர். இறுதியில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சார்பில் அமீரகத்தின் வளர்ச்சிக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். அதேபோல் அபுதாபி பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் இந்திய பிரதமருக்கும், இந்திய நாட்டு மக்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். அப்போது இருநாட்டு உறவுகள் குறிப்பிடத்தகுந்த, கவனிக்கத்தக்க வளர்ச்சியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

    அமெரிக்க தலையீட்டிற்கு பிறகு இஸ்ரேலுடன் அமீரகம் மற்றும் பக்ரைன் ஆகிய நாடுகள் அமைதிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் காரணமாக இந்த நாடுகளுக்கு இடையே இணைக்கமான தூதரக நட்புறவு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலைக்கு இந்திய மந்திரி ஒருவர் வளைகுடா நாடுகளின் முக்கிய தலைவர்களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் அமீரக வெளியுறவுத்துறை துணை மந்திரி டாக்டர் அன்வர் பின் முகம்மது கர்காஸ், அபுதாபி செயல் விவகார ஆணையத்தின் தலைவர் கல்தூன் கலீபா அல் முபாரக், அபுதாபி பட்டத்து இளவரசரின் செயல் அலுவலக செயலர் முகம்மது முபாரக் அல் மஸ்ரூயி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மத்திய மந்திரி ஜெய்சங்கர் இன்று செசல்ஸ் நாட்டிற்கு செல்கிறார். அங்கு அவர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த நாட்டின் ஜனாதிபதி வேவல் ராம்கல்வானை சந்தித்து பேசுகிறார்.
    Next Story
    ×