search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மன்மோகன்சிங், ஒபாமா
    X
    மன்மோகன்சிங், ஒபாமா

    இந்திய பொருளாதார மாற்றத்தின் சிற்பி மன்மோகன்சிங் - ஒபாமா புத்தகத்தில் புகழாரம்

    இந்திய பொருளாதார மாற்றத்தின் தலைமை சிற்பி, மன்மோகன்சிங் என்று ஒபாமா தனது புத்தகத்தில் புகழாரம் சூட்டி உள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா ‘எ பிராமிஸ்டு லேண்ட்’ (‘வாக்குறுதி அளிக்கப்பட்ட ஒரு நிலம்’) என்ற பெயரில் தனது அரசியல் வாழ்க்கையின் நினைவலைகளை இரு தொகுதிகளாக எழுதுகிறார். முதல் தொகுதி உலகமெங்கும் நேற்று விற்பனைக்கு வந்துள்ளது. இதில் 2008-ம் ஆண்டு அவர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் தொடங்கியதில் இருந்து தனது முதல் பதவிக்காலம் வரையிலானவற்றை (பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடன் அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டது வரையிலானவை) பகிர்ந்து கொண்டுள்ளார்.

    இந்த புத்தகத்தின் முதல் தொகுதிக்கு ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை விமர்சனம் எழுதி, அதன் மூலம் சில தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த புத்தகத்தில் இந்தியாவுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார்.

    இந்தியா பற்றி அவர் குறிப்பிடுகையில், “இந்தியா மீதான என் மோகம், மகாத்மா காந்தியுடன் தொடர்பு உடையது. ஆபிரகாம் லிங்கன், மார்ட்டின் லூதர்கிங், நெல்சன் மண்டேலா ஆகியோருடன் மகாத்மா காந்தி என் சிந்தனையில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தினார்” என கூறி உள்ளார்.

    “ஒரு இளைஞனாக நான் மகாத்மா காந்தியின் எழுத்துகளை படித்தேன். என் ஆழ்ந்த உள்ளுணர்வுகளுக்கு அவர் குரல் கொடுப்பதை நான் கண்டேன்” என மகாத்மா காந்தியைப்பற்றி எழுதுகையில் நெகிழ்ந்து போய் இருக்கிறார் ஒபாமா.

    இந்த புத்தகத்தில் அவர் இன்றைய நவீன இந்தியாவை பாராட்ட தவறவில்லை.

    இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “மீண்டும் மீண்டும் ஆட்சி மாற்றங்கள், அரசியல் கட்சிகளுக்குள் கடும் சண்டைகள், பிரிவினைவாதிகளின் ஆயுதப்போராட்டங்கள், ஊழல் மோசடிகள் என எல்லாவற்றிலும் தப்பித்து பல அம்சங்களில் நவீன இந்தியா ஒரு வெற்றிக்கதையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது” என கூறி உள்ளார்.

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றி ஒபாமா நிறைய சொல்கிறார். குறிப்பாக, “இந்திய பொருளாதார மாற்றத்தின் தலைமை சிற்பி மன்மோகன்சிங். அவர் முன்னேற்றத்தின் சின்னம். அடிக்கடி துன்புறுத்தல்களுக்கு ஆளான சீக்கிய மத சிறுபான்மை வகுப்பில் இருந்து நாட்டின் பிரதமராக உயர்ந்தவர். அவர் மக்களின் வாழ்க்கைத் தரங்களை உயர்த்தி, ஊழல் செய்யாததற்காக மக்களிடம் நற்பெயரை சம்பாதித்ததுடன் பேணியும் வருகிறார்” என கூறி உள்ளார். மேலும், மன்மோகன் சிங், தனது சொந்த பிரபலத்தின் பலனாக பிரதமராகவில்லை என்பதையும் ஒபாமா சுட்டிக்காட்டி இருக்கிறார்.

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பற்றி எழுதும்போது, “சோனியா காந்தி பேசுவதை விட, கேட்பதில் ஆர்வம் காட்டுகிறார். கொள்கை விஷயங்களைப்பற்றி பேசுகிறபோதெல்லாம் அதை மன்மோகன்சிங் வசம் தள்ளிவிடுவதில் கவனமாக இருந்தார்” என்றும் ஒபாமா எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×