search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகர்த்தப்பட்ட பள்ளிக்கூட கட்டிடம்
    X
    நகர்த்தப்பட்ட பள்ளிக்கூட கட்டிடம்

    5 மாடி கட்டிடத்தை அப்படியே 62 மீட்டர் தூரத்திற்கு நகர்த்தி சாதனை

    சீனாவில் இயந்திர கால்கள் மூலம் 5 மாடி கட்டிடம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது.
    பீஜிங்:

    தொழில்நுட்பத்துறையில் பல்வேறு முன்னேற்றங்கள் அடைந்துள்ள நாடுகள் பட்டியலில் முன்னிலையில் உள்ள நாடு சீனா. அந்நாட்டில் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறை ரீதியில் முன்னேற்றம் ஏற்பட்டு வரும் நிலையில் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களையும், வணிக வளாக கட்டிடங்களையும் வானலாய உயரத்தில் கட்டி வருகின்றன.

    அதுபோன்ற கட்டிடங்கள் கட்டும்போது பழைய கட்டிடங்கள் இடிக்கப்படுகின்றன. அவ்வாறு இடிக்கப்படும் கட்டிடங்களில் பாரம்பரிய மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களும் இலக்காகுகின்றன. 

    இதனால், பாரம்பரிய மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களை இடிக்காமல் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்தி வைக்கும் முயற்சியில் சீனா தற்போது களமிறங்கியுள்ளது, அந்த நடவடிக்கையில் வெற்றியடைந்தும் வருகிறது. அதுபோன்ற நிகழ்வு அந்நாட்டின் ஷாங்காய் மாகாணத்தில் நடந்து வருகிறது.

    சீனாவின் ஷாங்காய் மாகாணத்தின் குஅங்பு மாவட்டத்தில் 1935 ஆம் ஆண்டு 5 மாடிகளை கொண்ட மழலையர் பள்ளிக்கூடம் ஒன்று கட்டப்பட்டது. இந்த பள்ளிக்கூடத்தில் பல ஆண்டுகளாக கல்வி கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது. 

    85 ஆண்டு கால பாரம்பரியத்தை கொண்ட அந்த பள்ளிக்கூட கட்டிடம் அம்மாகாண அரசால் பாரம்பரிய பாதுகாப்பு மற்றும் கலாச்சார கட்டிடமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இந்த கட்டிடம் 7 ஆயிரத்து 600 டன் எடை கொண்ட ’T’ வடிவிலான அமைப்பாகும்.

    இந்நிலையில், பள்ளிக்கூடம் அமைந்துள்ள பகுதியில் புதிதாக வணிகவளாகம் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, பாரம்பரிய பாதுகாப்பு மற்றும் கலாச்சாரம் நிறைந்த கட்டிடமாக விளங்கிய அந்த பள்ளிக்கூட கட்டிடத்தை இடிக்கும் சூழ்நிலை உருவானது. 

    இதனால், கட்டிடத்தை இடிக்காமல் அதை அப்படியே 21 டிகிரி கோணத்தில் 62 மீட்டர் (203 அடி) தூரத்திற்கு நகர்த்தி வைக்க அதிகாரிகள் திட்டமிட்டனர்.

    இதையடுத்து, கட்டிடத்தை அஸ்திவாரத்தில் இருந்து மொத்தமாக எடுத்து அருகில் உள்ள இடத்தில் மீண்டும் வைக்க அதிகாரிகள் திட்டம் தீட்டினர். இதற்காக கட்டிடத்தை தாங்கி பிடிக்கும் அஸ்திவார தூண்கள் உடைக்கப்பட்டு அந்த தூண்களுக்கு பதிலாக நகரும் வகையிலான இயந்திர கால்கள் அமைக்கப்பட்டன. மொத்தம் 198 இயந்திர கால்கள் அமைக்கப்பட்டன.

    கட்டிடத்தின் அஸ்திவார தூண்கள் அனைத்தும் உடைக்கப்பட்டு கட்டிடத்துடன் இயந்திர கால்கள் பொருத்தப்பட்டன. அதன் பின் ’T' வடிவிலான அந்த கட்டிடத்தை திட்டமிட்டபடி 62 மீட்டர் தூரத்திற்கு நகர்த்தும் பணி 18 நாட்களாக நடைபெற்றது.



    இதையடுத்து, 5 மாடி பள்ளிக்கூட கட்டிடம் எந்தவித பாதிப்பும் இன்றி வெற்றிகரமாக வெறு இடத்தில் நிலைநிறுத்தப்பட்டது. இந்த சவாலான பணியை மேற்கொண்ட ஷாங்காய் இவலுயேசன் நிறுவனத்தின் பொறியியல் துறையினருக்கும் பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    Next Story
    ×