search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோ பைடன்
    X
    ஜோ பைடன்

    கொரோனாவை கட்டுப்படுத்த அமெரிக்காவில் முக கவசம் அணிவதை கட்டாயமாக்க ஜோ பைடன் திட்டம்

    அமெரிக்கா முழுவதும் முக கவசம் அணிவதை கட்டாயமாக்க ஜோ பைடன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    வாஷிங்டன்:

    உலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்த சூழலில் கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் அங்கு நடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் ஜோ பைடனை வெற்றி பெறச் செய்துள்ளனர்.

    எனவே அவர் தான் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்துத் திட்டங்களையும் தீவிரமாக செயல்படுத்துவேன் என உறுதி அளித்துள்ளார். மேலும் அதற்கான ஆயத்த பணிகளை அவர் இப்போதே தொடங்கியுள்ளார்.

    இந்நிலையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமெரிக்கா முழுவதும் முக கவசம் அணிவதை கட்டாயமாக்க ஜோ பைடன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஜோ பைடனின் மூத்த ஆலோசகர் ஒருவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது இதனை தெரிவித்தார்.

    முக கவசம் அணிவது கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் என ஜோ பைடன் முழுமையாக நம்புவதாகவும், எனவே நாடு முழுவதும் இதனை தீவிரமாக செயல்படுத்த அவர் முடிவு செய்துள்ளதாகவும் ஆலோசகர் குறிப்பிட்டார்.

    ஜனாதிபதி டிரம்ப், முக கவசம் அணிவதால் நோய் பரவாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனக்கூறி வந்ததும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி மீண்ட பிறகும் முக கவசம் அணியாமல் பிரசாரங்களில் பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×