search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    அமெரிக்காவில் ஓட்டு எண்ணிக்கையில் ஏன் இந்த நத்தை வேகம்?

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் ஏன்தான் இந்த நத்தை வேகம் என்பதற்கான காரண காரியங்களை தெரிந்து கொள்ளவோமா.
    வாஷிங்டன்:

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவை அகில உலகமே எதிர்பார்த்து காத்துக்கிடக்கிறது.

    ஆனால் ஓட்டு எண்ணிக்கையில் ஏன்தான் இந்த நத்தை வேகம் என்று உலகமே அங்கலாய்த்து கொண்டிருக்கிறது. அதற்கான காரண காரியங்களை தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?

    * அமெரிக்காவின் 50 மாகாணங்களும் தேர்தல்கள் நடத்துவதிலும், ஓட்டு எண்ணிக்கையிலும் மாறுபட்ட சட்டங்களை கொண்டிருக்கின்றன. அங்கே மத்திய சட்டம் என்பது, ஓட்டு எண்ணிக்கை முடிக்க வேண்டிய பாதுகாப்பான காலக்கெடுவை நிர்ணயிப்பதில் மட்டுமே அடங்கி இருக்கிறது. அந்த வகையில் அங்கே டிசம்பர் 8-ந்தேதிவரை ஓட்டு எண்ணிக்கையை நடத்த முடியும்.

    * பல மாகாணங்கள் முன்கூட்டியே நேரில் ஓட்டு போட அனுமதிக்கின்றன. இதே போன்று தபால் மூலமும் வாக்கு அளிக்க அனுமதி உண்டு. இந்த வாக்குகளை சில மாகாணங்கள் தேர்தல் நாளான நவம்பர் 3-ந்தேதி வரை எண்ணத் தொடங்கவில்லை. இந்த மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை நீண்ட காலம் நடக்கிறது. இந்த தேர்தலில் 10 கோடியே 13 லட்சம் வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்கு அளித்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி இருக்கிறார்கள்.

    * நமது இந்தியாவில் தபால் ஓட்டு எண்ணிக்கை என்பது மிகக்குறைவான அளவுதான். பாதுகாப்பு படையினர், தேர்தல் பணியாளர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் உள்ளிட்ட சில பிரிவினர் மட்டுமே இங்கு தபால் வாக்கு அளிக்க முடியும். ஆனால் அமெரிக்காவில் தபால் ஓட்டு யார் வேண்டுமானாலும் போடலாம்.

    * தபால் வாக்குகளை பெறுவதிலும், அவற்றை எண்ணுவதிலும் உள்ள மாறுபட்ட விதிமுறைகள் ஓட்டு எண்ணிக்கையை தாமதப்படுத்தியது. இந்த தேர்தலில் 22 மாகாணங்களும் வாஷிங்டன் டி.சி.யும் நவம்பர் 3-ந்தேதிக்கு பின்னரும் தபால் வாக்குகளை பெற்றன. ஆனால் அவை நவம்பர் 3-ந் தேதிக்கு முன்னர் அனுப்பி அதற்கான அஞ்சல் முத்திரை இருக்க வேண்டும்.

    * வட கரோலினா மாகாணத்தில் தபால் ஓட்டுகளை வரும் 12-ந்தேதி வரை பெற முடியும். எனவே வாக்கு எண்ணிக்கை அங்கே தொடரும்.

    * 2016 தேர்தலில் முன்கூட்டியே ஓட்டு போட்டவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 80 லட்சம் ஆகும். இந்த தேர்தலில் வாக்குப்பதிவு நாளுக்கு ஒரு வாரத்துக்கு முன்கூட்டியே இந்த எண்ணிக்கை கடந்து விட்டது.

    * பொதுவாக வாக்குச்சீட்டின் மூலம் நடக்கிற தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை அதிக நேரம் பிடிக்கும். மின்னணு வாக்கு எந்திரங்கள் அமெரிக்காவில் பயன்படுத்தப்படுவதில்லை. வாக்குச்சீட்டு நடைமுறைதான். இ-ஓட்டு பேக்ஸ் அல்லது இமெயில் மூலம் அனுமதிக்கப்படுகிறது.

    * அஞ்சல் துறையில் தபால் வாக்குகளை பிரிக்கிற எந்திரங்கள் அகற்றப்பட்டதாகவும், பல மாகாணங்களில் தபால் பெட்டிகளே அகற்றப்பட்டு விட்டதாகவும் ஒரு சர்ச்சை இருப்பது வேறு கதை.

    * இந்த தேர்தலில் முன்கூட்டியே நேரில் ஓட்டு போட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 59 லட்சத்து 35 ஆயிரத்து 583. முன்கூட்டியே தபால் ஓட்டு போட்டவர்கள் எண்ணிக்கை 6 கோடியே 53 லட்சத்து 79 ஆயிரத்து 247. மொத்தமாக முன்கூட்டியே வாக்கு அளித்தவர்கள் எண்ணிக்கை 10 கோடியே 13 லட்சத்து 14 ஆயிரத்து 830.

    எல்லாம் சரி, இந்த ஆண்டு இதுவரை இல்லாத வகையில் முன்கூட்டியே வாக்கு அளித்தவர்கள் எண்ணிக்கை இந்த அளவுக்கு அதிகரிக்க காரணம் என்ன என்று கேளுங்கள். ம்.. வேறு யாருமல்ல, திருவாளர் கொரோனா வைரஸ்தான்!

    கொரோனா வைரஸ் பரவல் அச்சத்தால்தான் இவ்வளவு பேர் தேர்தல் நாள் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே வாக்கு அளித்திருக்கிறார்கள்.
    Next Story
    ×