search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோ பிடனின் பிரச்சார பேருந்தை சூழ்ந்து செல்லும் வாகனங்கள்
    X
    ஜோ பிடனின் பிரச்சார பேருந்தை சூழ்ந்து செல்லும் வாகனங்கள்

    ஜோ பிடனின் பிரச்சார பேருந்தை செல்ல விடாமல் தடுத்த டிரம்ப் ஆதரவாளர்கள் -எப்.பி.ஐ. விசாரணை

    அமெரிக்காவில் நாளை அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஜோ பிடனின் பிரச்சார பேருந்தை செல்லவிடாமல் டிரம்ப் ஆதரவாளர்கள் தடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நாளை நடைபெறும் அதிபர் தேர்தல், சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிட, அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களம் காண்கிறார். 

    கடந்த சில தினங்களாக வேட்பாளர்கள் இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். நேற்று நடந்த இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். கொரோனா வைரஸ், இனப்பாகுபாடு ஆகிய விவகாரங்கள் இந்த தேர்தலில் முக்கிய பிரச்சினைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன. பிரச்சாரத்தின்போது ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

    இந்நிலையில், நேற்று முன்தினம் டெக்சாஸ் மாநிலத்தில் ஜோ பிடனின் பிரச்சார வாகனமான பேருந்தை டிரம்ப் ஆதரவாளர்களின் வாகனங்கள் சூழ்ந்துகொண்டு தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

    டெக்சாஸ் நெடுஞ்சாலையில் டிரம்ப் கொடி தாங்கிய பல டிரக்குகள் பிடன்/ஹாரிஸ் பிரச்சர பேருந்தை சூழ்ந்துகொண்டு சென்றதால் அந்த பேருந்து மெதுவாக செல்ல நேர்ந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. 

    இந்த வீடியோவை டிரம்பும் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் ஐ  லவ் டெக்சாஸ் என்று ஆதரவாளர்களை பாராட்டி உள்ளார். 

    டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த வேட்பாளர் வெண்டி டேவிஸ் சென்ற பேருந்து தடுத்து நிறுத்தப்பட்டதால் பாதுகாப்பு கருதி 2 நிகழ்ச்சிகள் மற்றும் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக ஜனநாயக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். 

    இந்த சம்பவம் குறித்து பேசிய ஜோ பிடன், ‘நாங்கள் இதுபோன்று எப்போதும் செய்ததில்லை. இது ஒரு நல்ல விஷயம் என்று நினைக்கும் ஒரு ஜனாதிபதியை இதுவரை பார்த்ததில்லை’ என்றார். 

    நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டிரம்ப் ஆதரவாளர்களின் இந்த செயல் மற்றும் அவர்களை ஆதரித்து டிரம்ப் வெளியிட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×