search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    இலங்கையில் காற்று மாசுபாடு எதிர்பாராத அளவு அதிகரிப்பு

    இலங்கையில் கடந்த சில தினங்களாக எதிர்பாராத அளவிற்கு காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளது.
    கொலும்பு:

    இலங்கையில் கடந்த சில தினங்களாக காற்று மாசுபாடு எதிர்பாராத அளவு மிகுந்த மோசமான அளவில் அதிகரித்துள்ளதாகவும், அதிலும் குறிப்பாக கடந்த அக்டோபர் 27 முதல் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்(NBRO) தெரிவித்துள்ளது.

    இலங்கையின் தென் பகுதியை தவிர பெரும்பாலான பகுதிகளில் இவ்வாறு காற்று மாசடைதல் அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொழும்பு, கண்டி, புத்தளம், வவுனியா, யாழ்ப்பாணம் உள்ளிட்ட தென் பகுதி தவிர்த்த ஏனைய அனைத்து பகுதிகளிலும் வளி மாசடைதல் அதிகரித்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இலங்கையில் கொரோனா தாக்கம் அதிகரித்த நிலையில், அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், வாகனப் போக்குவரத்து குறைந்துள்ள நிலையில், தற்போது காற்று மாசடையும் விகிதம் குறைந்திருக்க வேண்டும் என்றாலும் மாறாக தற்போது காற்று மாசு அதிகரித்து வருவது கவலையளிக்கும் ஒன்றாக அமைந்துள்ளது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    இலங்கையை சூழ்ந்துள்ள பகுதிகளில் கடும் காற்றுடனான வானிலை காணப்படுவதால், நாட்டிற்குள் தற்போது காற்று மாசுபாடு அதிகரித்திருக்கலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் ஏற்பட்டுள்ள காற்று மாசு காரணமாகவும், இலங்கையில் வளிமண்டல எல்லைப் பகுதியில் காற்று மாசு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த காற்று மாசு காரணமாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகளில் சுவாசக் கோளாறு உள்ளவர்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம் என்றும் ஏனையோருக்கு இதனால் பாதிப்பு ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு காரணமாக ஏற்படக்கூடிய சுகாதார பிரச்சனைகள் குறித்து சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்து வருவதாகவும், சுகாதார பிரச்சனைகள் ஏற்படாதிருப்பதிற்கு தொடர்ச்சியாக முகக்கவசத்தை அணியுமாறும் இலங்கை சுகாதாரத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
    Next Story
    ×