search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    நைஜர் நாட்டில் கடத்தப்பட்ட தங்கள் நாட்டு குடிமகனை நைஜீரியாவில் மீட்ட அமெரிக்க அதிரடி படை - பாராட்டு தெரிவித்த டிரம்ப்

    அமெரிக்காவை சேர்ந்த நபரை நைஜரில் ஒரு கும்பல் கடத்தியது. அந்த கும்பலிடம் இருந்து கடத்தப்பட்ட நபரை அமெரிக்க அதிரடிப்படை பாதுகாப்பாக மீட்டது.
    அபுஜா:

    மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று நைஜர். இந்நாட்டை சுற்றிலும் லிபியா, சாட், நைஜீரியா ஆகிய நாடுகள் எல்லைகளாக அமைந்துள்ளது. பயங்கரவாத செயல்களின் ஆதிக்கம் நிறைந்த இந்நாடுகளில் போரால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் வகையில் பல நாடுகளை சேர்ந்தவர்கள் தன்னார்வாக இந்நாடுகளில் தங்கி பாதுகாப்பு, தொண்டு பணிகளை செய்து வருகின்றனர். அவ்வாறு செயல்படும் தன்னார்வலர்களையும், பாதுகாப்பு பணியில் உள்ளவர்களையும் பயங்கரவாதிகள் கடத்தி செல்வது வழக்கமானதாகும்.

    இதற்கிடையில், அமெரிக்காவை சேர்ந்த பிலிப் நைதன் வால்டன் என்ற 27 வயது நபர் நைஜரில் வசித்து தொண்டு நிவாரண உதவிகளை செய்து வந்தார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை தனது வீட்டில் இருந்தபோது அங்குவந்த மர்ம நபர்கள் பிலிப்பை பணத்திற்காக கடத்தி சென்றனர். 

    இந்த சம்பவம் தொடர்பாக நைஜரில் உள்ள அமெரிக்க தூதரகத்திடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த தகவல் அமெரிக்க அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டது. 

    இந்த தகவலையடுத்து, கடத்தப்பட்ட தங்கள் நாட்டு நபரை மீட்க்க அமெரிக்காவின் மிகவும் பிரபலமான ’சீல்’ மீட்பு படையினர் தயார் படுத்தப்பட்டனர்.

    உளவு மற்றும் ரகசிய தகவல்கள் அடிப்படையில் பிலிப் நைஜரில் இருந்து அண்டைநாடான நைஜீரியாவுக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, சிறப்பு நடவடிக்கையாக நைஜீரியாவுக்கு சென்ற அமெரிக்காவின் ‘சீல்’ வீரர்கள் பிலிப் கடத்தி வைக்கப்பட்ட பகுதியில் நேற்று அதிரடியாக தாக்குதல் நடத்தினர்.

    இந்த அதிரடி தாக்குதலில் கடத்தல்காரர்களில் 6 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த அதிரடி நடவடிக்கையின்போது கடத்தால்காரர்களிடம் இருந்து பிலிப் மீட்கப்பட்டார்.

    நைஜரில் பிலிப்பை கடத்திய நபர்கள் அவரை நைஜீரியாவில் பயங்கரவாத அமைப்பினரிடம் ஒப்படைத்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கடத்தல் கும்பலிடம் இருந்து மீட்கப்பட்ட அமெரிக்க குடிமகன் பிலிப் தற்போது பத்திரமாக உள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.

    இந்த மீட்பு நடவடிக்கை தொடர்பாக அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ நேற்று இரவு நமது நாட்டின் வீரர்கள் நைஜீரியாவில் பிணைக்கைதியாக கடத்தப்பட்டிருந்த அமெரிக்க குடிமகனை மீட்டுள்ளனர்.

    இரவு நேரத்தில் நடந்த இந்த மீட்பு நடவடிக்கையை சிறப்பாக செய்து முடித்த நமது வீரர்களின் இந்த உறுதிமிகு நடவடிக்கைக்கு நமது நாடு சல்யூட் செய்கிறது. மற்றொருமொரு அமெரிக்கர் பாதுகாப்பாக திரும்புகிறார் என்பதை நாடு கொண்டாடுகிறது’ என தெரிவித்துள்ளார்.   
    Next Story
    ×