search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ‘ஸ்மார்ட்’ கேமரா பொருத்தி போக்குவரத்து விதிமீறல்கள் கண்காணிப்பு

    ராசல் கைமாவில் உள்ள சாலைகளில் ‘ஸ்மார்ட்’ கேமராக்கள் பொருத்தி போக்குவரத்து விதிமீறல்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
    ராசல் கைமா:

    ராசல் கைமா போலீஸ் துறையின் போக்குவரத்து மற்றும் ரோந்து பிரிவு இயக்குனர் அகமது அல் நக்பி கூறியதாவது:-

    ராசல் கைமா நகர் முழுவதும் புதிதாக ‘ஸ்மார்ட்’ கேமராக்கள் பொருத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. சாலைகளில் வாகனங்களில் செல்வோர் செய்யும் விதிமீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடங்களில் இந்த ‘ஸ்மார்ட்’ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    சாலை சந்திப்பு பகுதிகளில் அடிக்கடி விதிமீறல்கள் நடந்து வருகிறது. நெரிசல் மிகுந்த நேரத்தில் சிக்னல் பகுதியில் உள்ள சிவப்பு நிற விளக்கு எரியும் நேரத்தில் அந்த சாலையை பல வாகனங்கள் வேகமாக கடந்து செல்ல முயற்சிக்கின்றன. பாதசாரிகள் கடக்கும் இடங்களில் நிற்பதும் விதிமீறலாகும்.

    சிவப்பு நிற விளக்கு எரியும் நேரத்திலும், பாதசாரிகள் கடக்கும் நேரத்திலும் சாலையில் செல்வது ஆபத்தானது. எதிரில் அல்லது சாலையை கடந்து செல்லும் பிற வாகனங்கள் மீதும் மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை கவனத்தில் கொண்டு ‘ஸ்மார்ட்’ கேமராக்கள் மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்ந்து நுட்பமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் சாலையில் வாகன ஓட்டிகள் தங்கள் பாதையை மாற்றுவதன் காரணமாக பிற வாகனங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. உதாரணமாக இலகு ரக வாகனங்கள் செல்லும் பாதையில் இருந்து ஒரு கார் கனரக வாகனங்கள் செல்லும் பாதையில் மாறி செல்வது விதிமீறலாகும். அவ்வாறு பாதையை மாற்றி பயணிப்பவர்களுக்கு 400 திர்ஹாம் அபராதம் விதிக்கப்படும்.

    கனரக வாகனங்களில் செல்வோர் தங்கள் பாதையில் இருந்து விலகி செல்வதற்கு 1,500 திர்ஹாம் அபராதம் விதிக்கப்படும். மேலும் அந்த ஓட்டுனர் உரிமங்கள் மீது 6 கருப்பு புள்ளிகள் வழங்கப்படும். எனவே சாலையில் வாகனங்களில் செல்வோர் விதிமுறைகளை மதித்து செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×