search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாலி தாக்குதல்
    X
    மாலி தாக்குதல்

    மாலியில் 25 பேரை கொன்று குவித்த 2 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை

    மாலியில் 25 பேரை கொன்று குவித்த வழக்கில் 2 பயங்கரவாதிகள் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
    பமாக்கோ:

    ஆப்பிரிக்க நாடான மாலியில் 2012-ம் ஆண்டில் இருந்து மத அடிப்படையிலான பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்தநிலையில் 2015-ம் ஆண்டு, மார்ச் 8-ந் தேதி, அதிகாலை 1 மணிக்கு தலைநகர் பமாக்கோவில் உள்ள இரவு விடுதி ஒன்றில் முக மூடி அணிந்த பயங்கரவாதி ஒருவன் நுழைந்து அங்கிருந்தவர்களை தானியங்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதுடன், கையெறி குண்டுகளையும் வீசினான்.

    இந்த தாக்குதலில் 2 ஐரோப்பியர்கள், 2 மாலி போலீசார் உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர். சுவிஸ் நாட்டை சேர்ந்த 3 பேர் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். 2012-ம் ஆண்டுக்கு பின்னர் அந்த நகரில் வெளிநாட்டினரை குறிவைத்து நடத்தப்பட்ட முதல் பயங்கரவாத தாக்குதல் இதுதான். அதே ஆண்டில் நவம்பர் மாதம் 20-ந் தேதி பமாக்கோவில் உள்ள ரேடிசன் புளூ நட்சத்திர ஓட்டலுக்குள் பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். அது மட்டுமின்றி ஓட்டலில் தங்கி இருந்த 170 பேரை பிணைக்கைதிகளாக பிடித்தார்கள். அதிரடிப்படை கமாண்டோக்கள் சென்று அதிரடியாக தாக்குதல் நடத்தி பிணைக்கைதிகளை விடுவித்தார்கள்.

    எனினும் பயங்கரவாதிகள் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர். மாலி நாட்டினர் 9 பேர், ரஷிய விமான சிப்பந்தி, சீன கட்டுமான நிறுவன அதிகாரிகள், பெல்ஜியம் அரசியல்வாதி, அமெரிக்க தொண்டு நிறுவன ஊழியர் உள்ளிட்டோர் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர். இவ்விரு தாக்குதல்களுக்கும் அல் முராபிடவுன் என்ற ஆப்பிரிக்க பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. மேலும் அந்த அமைப்பின் பயங்கரவாதிகளான மொரிட்டானியா நாட்டின் பவாஸ் ஓல்ட் அகமீதாவும், அவனது கூட்டாளியான சதோசாகோவும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது பயங்கரவாத குற்றம் சுமத்தப்பட்டது.

    வழக்கை விசாரித்த பமாக்கோ கோர்ட்டு அவர்கள் 2 பேர் மீதான பயங்கரவாத தாக்குதல் குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளிகள் என அறிவித்து மரண தண்டனை விதித்து நேற்றுமுன்தினம் தீர்ப்பு அளித்தது. மாலி நாட்டில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×