search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஐரோப்பாவில் கொரோனாவின் 2-வது அலை - பிரான்சில் மீண்டும் ஊரடங்கு

    ஐரோப்பா கொரோனாவின் 2-வது அலையை சந்தித்து வருகிறது. பிரான்சிலும், ஜெர்மனியிலும் மீண்டும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.
    பாரீஸ்:

    பிரான்ஸ் நாட்டில் இலையுதிர் காலம் தொடங்கியதில் இருந்து கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமாகி உள்ளது. கடந்த 25-ந் தேதி அங்கு புதிதாக 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. அந்த நாடு கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கத்தில் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

    இந்த நிலையில் வைரஸ் பரவலை தடுப்பதற்காக அங்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நாடு முழுவதும் 1 மாத காலத்துக்கு (நவம்பர் இறுதிவரை) ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மது விடுதிகள், உணவு விடுதிகள், ஓட்டல்கள், உணவு பொருட்கள் தவிர்த்த பிற பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மூடப்படுகின்றன. பொதுமக்கள் கூடுகை தடை செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பிற பிராந்தியங்களுக்கு பயண தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களுடன் திறந்து இருக்கும்.

    இதையொட்டி பிரான்ஸ் அதிபர் மெக்ரான் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “ஸ்பெயின், அயர்லாந்து, நெதர்லாந்து போன்ற சில நாடுகள் நம்மை விட கடுமையான நடவடிக்கைகள் எடுத்தன. நாம் அனைவரும் ஒரே நிலையில் இருக்கிறோம். முதல் அலையை விட 2-வது அலை ஆபத்தானது என்பதை நாம் அறிவோம்” என கூறி உள்ளார்.

    நாட்டு மக்களுக்கு நேற்று முன்தினம் மாலை உரையாற்றிய மெக்ரான், “வைரஸ் பரவலின் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ப கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அதிகாரிகள் தளர்த்துவார்கள். அடுத்த 2 வாரத்தில் நிலைமை மேம்பட்டால் சில கடைகளை மீண்டும் திறப்பது குறித்து அரசு பரிசீலிக்கும்” என தெரிவித்தார்.

    மேலும், “கொரோனா வைரசால் நாடு மூழ்கிவிடாமல் இருக்க கட்டுப்பாடுகளை மிகத்தீவிரமாக பின்பற்ற வேண்டும்” என்று மக்களை கேட்டுக்கொண்டார்.

    ஜெர்மனியிலும் பகுதி ஊரடங்கு 2-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுபான விடுதிகள் மூடப்பட்டிருக்கும். உணவு விடுதிகள் மூடப்படும். பள்ளிகள் திறந்திருக்கும். சமூக தொடர்புகள் 10 நபர்களை கொண்ட 2 வீடுகளுக்குள் மட்டுப்படுத்தப்படும். சுற்றுலா நிறுத்தப்படும்.

    கொரோனா வைரசுக்கு எதிராக நாடு தற்போது செயல்பட்டாக வேண்டும், தேசிய அளவில் கடுமையாக முயற்சிக்க வேண்டும் என்று ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் வலியுறுத்தி உள்ளார்.

    நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய அவர், “ இந்த பெருந்தொற்று சுதந்திரம் பற்றிய கேள்வியை முன்னிலைக்கு கொண்டு வருகிறது. சுதந்திரம் என்பது ஒவ்வொரு மனிதனுக்குமான தனிப்பட்டதல்ல. இது ஒரு தனி மனிதருக்கும், அவரது குடும்பத்துக்கும், பணியிடத்துக்குமானது. இதுதான் நாம் முழுமையாக இணைந்திருப்பதை காட்டுகிறது” என கூறினார்.

    ஸ்பெயின் நாட்டில் வைரஸ் நிலைமை மோசமாகி வருவதால் அண்டலுசியா, காஸ்டில்லா மாஞ்சா, காஸ்டில், லியோன், முர்சியா ஆகிய பிராந்தியங்களிலும் மக்கள் நடமாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது.

    அண்டலுசியாவில் உள்ள கிராண்டா, ஜெய்ன், செவில் ஆகிய மாகாணங்களில் பகுதி நேர ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே நவாரோ, ஆரகன், ஆஸ்டுரியாஸ், பாஸ்கியு கவுண்டி ரியோஜா ஆகிய பகுதிகளில் பகுதி நேர ஊரடங்கு உள்ளது.

    இத்தாலியில் ஏற்கனவே கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்து விட்டன. பெல்ஜியத்தில் நிலைமை மோசமாக இருப்பதாக அதன் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூ அறிவித்துள்ளார்.

    இங்கிலாந்தில் கொரோனாவின் 2-வது அலை மோசமாக உள்ளது. அங்கு தினந்தோறும் ஏறத்தாழ 1 லட்சம் பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று தாக்குகிறது.

    இதையொட்டி லண்டன் இம்பீரியல் கல்லூரி நடத்திய ஆய்வில், பெருந்தொற்று நோய் வேகமாக உச்சத்தை நெருங்குகிறது என தெரியவந்துள்ளது. ஒவ்வொரு 9 நாளிலும், நோய் தாக்கம் இரட்டிப்பாகிறது என தெரிய வந்துள்ளது.

    அதே நேரத்தில் பிரான்ஸ், ஜெர்மனி போல இங்கிலாந்து தேசிய அளவில் ஊரடங்கு போடாமல், பிராந்திய அளவில் கட்டுப்பாடுகளை விதித்து பின்பற்ற வைத்துள்ளது. மொத்தத்தில் ஐரோப்பிய நாடுகள் கொரோனாவின் 2-வது அலையில் சிக்கித்தவிக்கின்றன.
    Next Story
    ×