search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    லடாக் பிரச்சினையில் அமெரிக்காவின் தலையீட்டுக்கு சீனா எதிர்ப்பு

    லடாக் பிரச்சினையில் அமெரிக்காவின் தலையீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, இந்தியா-சீனா இடையேயான எல்லை பிரச்சினை, இருநாட்டு விவகாரம் என்று கூறியுள்ளது.
    பீஜிங்:

    லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறலால் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது. அங்குள்ள கல்வான் பள்ளத்தாக்கில் உயிர்ப்பலி ஏற்படும் வகையில் நிகழ்ந்த தாக்குதலும், அதன் பின்னரும் அரங்கேறிய மோதல்களும் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு ஊறு விளைவித்து வருகின்றன.

    இந்தியா-சீனா எல்லை நெடுகிலும் இருதரப்பும் படைகளை திரும்ப பெற்று அமைதியை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பேச்சுவார்த்தைகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் லடாக் விவகாரம் இந்தியா-சீனா இடையே நீறுபூத்த நெருப்பாகவே புகைந்து வருகிறது.

    இந்த நிலையில் இந்தியா-அமெரிக்கா இடையேயான ‘2 பிளஸ் 2’ பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் டெல்லியில் நடந்தது. இரு நாட்டு ராணுவ மற்றும் வெளியுறவு மந்திரிகள் இடையே நடந்த இந்த பேச்சுவார்த்தையில் இருநாடுகளுக்கு இடையே ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

    அத்துடன் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது எனவும் இந்த பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ, லடாக்கில் சீனாவின் அத்துமீறலை கண்டித்தார். இந்திய மக்கள் தங்கள் இறையாண்மைக்கும், சுதந்திரத்துக்கும் அச்சுறுத்தல்களை சந்திப்பதால், அமெரிக்கா இந்தியாவுடனும், அதன் மக்களுடனும் இருக்கும் என்று கூறினார்.

    சீன கம்யூனிஸ்டு கட்சி ஜனநாயகத்துக்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் நண்பர் இல்லை எனக்கூறிய அவர், அந்த கட்சியால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் கையாளுவதற்கான உறவுகளை மேம்படுத்துகிறோம் என்றும் தெரிவித்தார்.

    ஏற்கனவே தெற்கு, கிழக்கு சீனக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் சீனாவின் அத்துமீறலை தடுக்கும் வகையில் குவாட் நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கும் நிலையில், லடாக் விவகாரத்திலும் அமெரிக்காவின் இந்த இந்திய ஆதரவு நிலைப்பாடு சீனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக மைக் பாம்பியோவின் இந்த கருத்துகள் சீனாவுக்கு கடும் ஆத்திரத்தை கொடுத்துள்ளது.

    இதைத்தொடர்ந்து லடாக் விவகாரம் இந்தியா-சீனா சம்பந்தப்பட்ட பிரச்சினை எனவும், இதில் அமெரிக்கா தலையிடக்கூடாது எனவும் அந்த நாடு குறிப்பிட்டு உள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறியதாவது:-

    சீனா மற்றும் இந்தியா இடையேயான எல்லை பிரச்சினை, இருநாட்டு விவகாரம். தற்போது எல்லை நெடுகிலும் பொதுவாக நிலைத்தன்மை நிலவுகிறது. அங்குள்ள பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலமும், ஆலோசனைகள் வழியாகவும் தீர்க்க இருதரப்பும் உறுதிபூண்டுள்ளன.

    அமெரிக்கா பரிந்துரைத்துள்ள இந்தோ-பசிபிக் யுக்தி என்பது காலாவதியான பனிப்போர் மனநிலையை பிரசங்கித்தல் ஆகும். அது மட்டுமின்றி மோதல் மற்றும் புவிசார் அரசியல் விளையாட்டை எடுத்துரைத்தலும் ஆகும். இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிறுவுவதையே இது நோக்கமாக கொண்டிருக்கிறது.

    இது பிராந்தியத்துக்கான பொதுவான ஆர்வத்துக்கு மாறாக உள்ளது. எனவே இதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்.

    இதற்கு இடையில், பிராந்திய வளர்ச்சிக்கான எந்தவொரு கருத்தும் அமைதியான வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு வெற்றி ஒத்துழைப்புக்கான காலத்தின் போக்குக்கு ஏற்ப இருக்க வேண்டும்.

    இவ்வாறு வாங் வென்பின் கூறினார்.
    Next Story
    ×