search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமலா ஹாரிஸ்
    X
    கமலா ஹாரிஸ்

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளிப்பதை தடுக்க முயற்சி - கமலா ஹாரிஸ் குற்றச்சாட்டு

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்களிப்பதை தடுக்க சக்திவாய்ந்த நபர்கள் முயன்று வருவதாக கமலா ஹாரிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 3-ந் தேதி நடக்கிறது. குடியரசு கட்சி வேட்பாளராக ஜனாதிபதி டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பைடனும் போட்டியிடுகிறார்கள். துணை ஜனாதிபதி பதவிக்கு ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் களம் காண்கிறார்.

    இந்த நிலையில், மிச்சிகன் மாகாணம் சவுத்பீல்டில் உள்ள ஒரு தேவாலயத்துக்கு கமலா ஹாரிஸ் சென்றார். அங்கு அவர் பேசியதாவது:-

    தேவாலயம்தான் எனக்கு எப்போதும் வலிமையை அளித்து வருகிறது. என்னை பிரதிபலிக்கும் இடமாகவும் இருக்கிறது. நான் கடவுளுடன் தனியாக உரையாடும்போது, எனக்கு வலிமையையும், பாதுகாப்பையும், நல்லதை செய்வதற்கான வழிகாட்டுதலையும் அளிக்குமாறு தான் கேட்பேன்.

    கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள், வெள்ளை மாளிகையில் அமர்ந்துள்ளனர். அதுதான் வாக்குகளின் வலிமை. இந்த தடவை அந்த தவறு நடக்க விடக்கூடாது. அதாவது, எல்லோரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மற்றொரு இடத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் கமலா ஹாரிஸ் பேசுகையில், “மக்கள் வாக்களிப்பதை தடுக்க சக்திவாய்ந்த நபர்கள் முயன்று வருகிறார்கள். ஏனென்றால், அவர்களுக்கு மக்கள் சக்தி என்ன என்று தெரியும்.

    எனவே, தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு வருகிறார்கள். ஆனால், நமது அதிகாரத்தை நம்மிடம் இருந்து பறிக்க யாரையும் அனுமதிக்கக்கூடாது” என்று குறிப்பிட்டார்.
    Next Story
    ×