search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கை
    X
    இலங்கை

    இங்கிலாந்தில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம் - இலங்கை அரசு மேல்முறையீடு

    விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை இங்கிலாந்து நீக்கியது. இதை எதிர்த்து இலங்கை அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
    கொழும்பு:

    இலங்கையில் சுமார் 30 ஆண்டுகளாக இயங்கி வந்த விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இங்கிலாந்து அரசு கடந்த 2000-ம் ஆண்டில் தடை விதித்தது. இங்கிலாந்து பயங்கரவாத சட்டம் 2000-ன் கீழ் தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பட்டியலில் அதை சேர்த்திருந்தது.

    ஆனால் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இலங்கை இறுதிக்கட்ட போருக்குப்பின் இந்த இயக்கத்தின் செயல்பாடுகள் நின்று போயிருப்பதால், அதன் மீதான தடையை நீக்க வேண்டுமென்று விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கம் ஒன்று கோரிக்கை விடுத்தது. இதை கடந்த ஆண்டு இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் நிராகரித்தது.

    இதைத்தொடர்ந்து அந்த அமைப்பு சார்பில் இங்கிலாந்தின் தடை செய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு கமிஷனில் (பி.ஓ.ஏ.சி.) மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த பி.ஓ.ஏ.சி., விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கி நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

    பி.ஓ.ஏ.சி.யின் இந்த நடவடிக்கையை எதிர்த்து அந்த கமிஷனில் இலங்கை அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இது தொடர்பாக அந்த நாட்டு வெளியுறவுத்துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இங்கிலாந்தின் பி.ஓ.ஏ.சி.யின் வெளிப்படையான தீர்ப்பை இலங்கை அறிந்துள்ளது. இந்த கமிஷனின் நடவடிக்கையில் இலங்கை ஒரு தரப்பாக இல்லை. அதைப்போல நேரடி பிரதிநிதிகளையும் ஏற்படுத்த முடியாது. எனினும் தொடரும் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்த தகவல்களை இங்கிலாந்து அரசுக்கு வழங்கி, உதவி செய்து வந்தது.

    பி.ஓ.ஏ.சி.யின் தீர்ப்பு மேல்முறையீட்டுக்கு அனுமதிக்கிறது. மேலும் விசாரணைகளை வழங்குகிறது. அதன்படி இலங்கை அரசு இந்த வழக்கின் போக்கை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணிக்கும். விடுதலைப்புலிகள் மற்றும் அது சார்ந்த அமைப்புகள் வெளிநாடுகளில் செயல்பட்டு வருவதற்கான போதுமான ஆதாரங்கள் இலங்கை அரசிடம் உள்ளன.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
    Next Story
    ×