search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்
    X
    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்

    நவாஸ் ஷெரீப்பை நாடு கடத்துங்கள் - இங்கிலாந்துக்கு பாகிஸ்தான் 3-வது முறையாக வலியுறுத்தல்

    ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு, லண்டனில் தங்கியுள்ள நவாஸ் ஷெரீப்பை நாடு கடத்துமாறு இங்கிலாந்து அரசை பாகிஸ்தான் அரசு 3-வது முறையாக வலியுறுத்தி உள்ளது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் (வயது 70).  இவருக்கு அல் அஜிசியா ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து ஊழல் தடுப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. ஆனால் அவர் தண்டிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு லாகூர் ஐகோர்ட்டின் அனுமதி பெற்று சிகிச்சைக்காக இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சென்றார்.

    4 வாரங்களில் திரும்பி வந்து விடுவேன் என அவர் லாகூர் ஐகோர்ட்டில் உத்தரவாதம் அளித்துச்சென்றாலும், அதன்படி அவர் நாடு திரும்பவில்லை. இதனால் அவர் ஊழல் வழக்கில் தண்டனையை அனுபவிப்பதில் இருந்து தப்பித்து வருகிறார்.

    இதையடுத்து அவரை கைது செய்து ஆஜர்படுத்த ஏதுவாக இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து கடந்த செப்டம்பர் மாதம் 15-ந்தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    ஆனால் அந்த பிடிவாரண்டை இதுவரை நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது.

    அவரை நாடு கடத்த வேண்டும் என்று இங்கிலாந்து அரசிடம் பாகிஸ்தான் அரசு ஏற்கனவே 2 முறை கோரிக்கை வைத்தது. அது பலன் அளிக்கவில்லை.

    இந்த நிலையில் நவாஸ் ஷெரீப்பை நாடு கடத்த வேண்டும் என்று இங்கிலாந்து அரசிடம் மூன்றாவது முறையாக பாகிஸ்தானின் இம்ரான்கான் அரசு வலியுறுத்தி உள்ளது.

    இந்த முறை இது தொடர்பான கடிதத்தை இஸ்லாமாபாத்தில் உள்ள இங்கிலாந்து தூதரிடம் தனிப்பட்ட முறையில் இம்ரான்கான் அரசு வழங்கியது.

    நவாஸ் ஷெரீப்புக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இங்கிலாந்து அரசு வழங்கிய விசாவை ரத்து செய்ய வேண்டும் என்றும் பாகிஸ்தான் அரசு அதில் கேட்டுக்கொண்டுள்ளது.

    மேலும், இங்கிலாந்தின் குடியேற்ற சட்டத்தில் 4 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட எந்தவொரு நபரும் அவர் பிறந்த நாட்டுக்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்று கூறி இருப்பதும் இந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    இதுபற்றி பிரதமர் இம்ரான்கானின் ஆலோசகர் ஷாஜாத் அக்பர் கூறும்போது, “நவாஸ் ஷெரீப்பை நாடு கடத்தும்படிக்கு இங்கிலாந்து அரசை கடந்த 5-ந்தேதியில் இருந்து இதுவரை 3 முறை கேட்டுக்கொண்டுள்ளோம்” என குறிப்பிட்டார்.
    Next Story
    ×