search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோ பைடன் - கமலா ஹாரிஸ்
    X
    ஜோ பைடன் - கமலா ஹாரிஸ்

    தேர்தல் பிரசார குழு தகவல் தொடர்பு இயக்குனருக்கு கொரோனா - பிரசார நிகழ்சியை ரத்து செய்தார் கமலா ஹாரிஸ்

    தேர்தல் பிரசார குழுவில் உள்ள தகவல் தொடர்பு இயக்குனருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் தேர்தல் பிரசார நிகழ்சியை ரத்து செய்துள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 3-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டெனால்டு டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர். 

    அதேபோல் துணை அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபராக உள்ள மைக் பென்ஸ் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

    தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளில் இரு கட்சியின் வேட்பாளர்களுமே பங்கேற்று வாக்கு சேகரிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளனர். 

    அதிபர் டிரம்ப், பைக் பென்ஸ் பல்வேறு மாகாணங்களில் தேர்தல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். அதேபோல் ஜோ பைடனுடன் இணைந்து கமலா ஹாரிசும் தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். 

    இதற்கிடையில், உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்பும் (74 வயது) அவரது மனைவி மெலனியா டிரம்ப்பும் கடந்த 2-ம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

    அதில் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினியா, அவர்களது மகன் ஆகிய மூவருக்குமே கொரோனா வைரஸ் தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து, இருவரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக டொனால்டு டிரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

    பின்னர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன டிரம்ப் வெள்ளைமாளிகையில் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார். ஆனால், கொரோனா பாதிப்பு முழுமையாக குணமடையாத போது அதிபர் டிரம்ப் மீண்டும் தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், ஜனநாயக கட்சியின் துணைஅதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் வடக்கு கரோலினா மாகாணத்திற்கு இன்று பயணம் மேற்கொள்ளவிருந்தார். 

    ஆனால், கமலாஹாரிசின் தேர்தல் பிரசார குழுவில் உள்ள தகவல் தொடர்பு இயக்குனர் லிஸ் அலேம் மற்றும் விமானக்குழு ஊழியர்களில் ஒருவர் என மொத்தம் இரண்டு பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து, வடக்கு கரோலினா மாகாணத்திற்கு தேர்தல் பிரசார நிகழ்ச்சிக்கு செல்லவிருந்த கமலா ஹாரிஸ் தனது பயணத்தை ரத்து செய்தார். 

    வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களுடன் கமலா ஹாரிஸ் நேரடித்தொடர்பில் இல்லாததால் அவர் தனிமைப்படுத்திக்கொள்ள அவசியமில்லை என ஜனநாயக கட்சி தேர்தல் பிரசார குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கமலா ஹாரிஸ் இன்று கொரோனா பரிசோதனை எதுவும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×