search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேராசிரியர் தீப்தா பட்டாச்சாரியா
    X
    பேராசிரியர் தீப்தா பட்டாச்சாரியா

    கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்புச்சக்தி, பல மாதங்களுக்கு நீடிக்கும் - இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு

    கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்புச்சக்தி பல மாதங்களுக்கு நீடிக்கும் என்று அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    உலகை இன்றளவும் கதிகலங்க வைத்து வருகிற கொரோனா வைரஸ் பாதித்த ஒருவருடைய உடலில் அதற்கு எதிரான நோய் எதிர்ப்புச்சக்தி உருவாகும். அந்த எதிர்ப்புச்சக்தி இருக்கிறவரையில், மீண்டும் கொரோனா வருவது தடுக்கப்படும். கொரோனா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்புச்சக்தி (ஆன்டிபாடிகள்), நோய் தொற்றுக்கு பிறகு விரைவாக குறைய வாய்ப்பு உள்ளது என்று இதற்கு முன் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் கூறின.

    ஆனால் அப்படி அல்ல, இந்த நோய் எதிர்ப்புச்சக்தி, தொற்றுக்கு பின்னர் பல மாதங்கள் நீடிக்கும் என்று அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளரான பேராசிரியர் தீப்தா பட்டாச்சாரியா (அரிசோனா பல்கலைக்கழக பேராசிரியர்) கண்டுபிடித்துள்ளார். இது தொடர்பான ஆய்வை அவர் பேராசிரியர் ஜாங்கோ நிகோலிச் ஜூகிச்சுடன் நடத்தி இதன் முடிவுகளை இம்யூனிட்டி பத்திரிகையில் வெளியிட்டுள்ளார்.

    இந்த ஆய்வில் கொரோனா பாதித்த 6 ஆயிரம் பேர் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

    இதுபற்றி பேராசிரியர் தீப்தா பட்டாச்சாரியா கூறியதாவது:-

    நாங்கள் கொரோனாவுக்கு எதிரான தரமான நோய் எதிர்ப்புச்சக்தி, கொரோனா தொற்று பாதித்த 7 மாதங்களுக்கு பிறகும் கூட உற்பத்தி செய்யப்படுவதை பார்த்துள்ளோம். கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்புச்சக்தி நீண்ட காலம் நீடிக்காது என பலரும் கவலை தெரிவித்து இருந்தனர். ஆனால் நாங்கள் இது தொடர்பாக ஆராய்ந்தபோது, நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்தது 5 மாதங்கள் நிலைத்து இருப்பதை கண்டறிந்தோம்.

    வைரஸ் தொற்று எப்போது முதன்முதலாக செல்களை பாதிக்கிறதோ, அப்போது நோய் எதிர்ப்பு அமைப்பு வைரசை எதிர்த்து போராட நோய் எதிர்ப்புச்சக்தியை உருவாக்கும் குறுகிய கால பிளாஸ்மா செல்களை வரிசைப்படுத்துகிறது. இவை, தொற்று பாதித்த 14 நாட்களுக்குள் ரத்த பரிசோதனை செய்கிறபோது, காணப்படுகின்றன.

    இரண்டாவது கட்ட நோய் எதிர்ப்பு மறுமொழியாக, நீண்ட கால பிளாஸ்மா செல்கள் உருவாகின்றன. அவை தரம் வாய்ந்த நோய் எதிர்ப்புச்சக்தியை உருவாக்குகின்றன. இவைதான் பல மாதங்கள் நீடிக்கின்றன.

    கொரோனா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்தது 5 முதல் 7 மாதங்கள் வரை ரத்த பரிசோதனையில் சாத்தியமான அளவுகளில் இருப்பதை நாங்கள் கண்டோம். நோய் எதிர்ப்புச்சக்தி இன்னும் அதிக காலம் நீடிக் கும் என்று நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×