search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரம்ப், ஜோ பைடன்
    X
    டிரம்ப், ஜோ பைடன்

    அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் - டிரம்ப் கடும் விமர்சனம்

    அமெரிக்க அரசியல் வரலாற்றில் மிகவும் மோசமான ஜனாதிபதி வேட்பாளர் என்றால் அது ஜோ பைடன் மட்டும்தான் என ஜனாதிபதி டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்தார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் அடுத்த மாதம் 3-ந்தேதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி, டிரம்ப் 2-வது முறையாக போட்டியிட அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் களம் இறக்கப்பட்டுள்ளார். தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ள ஜனாதிபதி டிரம்ப், தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.

    அதன்படி நேற்று பென்சில்வேனியா மாகாணத்தில் நடந்த பிரசாரா பேரணியில் டிரம்ப் கலந்து கொண்டார். அப்போது அவர் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனை கடுமையாக விமர்சனம் செய்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    அமெரிக்க அரசியல் வரலாற்றில் மிகவும் மோசமான ஜனாதிபதி வேட்பாளர் என்றால் அது ஜோ பைடன் மட்டும்தான். அவர் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டது நம்பமுடியாதது; அருவருப்பானது மற்றும் அவமானகரமானது. தேர்தலில் அவர் வென்றால் நாட்டை அவர் வழி நடத்த மாட்டார். தீவிர இடதுசாரிகள் தான் நாட்டை இயக்கும்.

    மேலும் ஜோ பைடன் வெற்றி பெற்றால் அது சீனாவின் வெற்றியாக அமையும். அமெரிக்காவின் மீதான சீனாவின் அச்சுறுத்தல் நடவடிக்கைகளை நான் தடுத்து வருகிறேன். அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புக்கு அச்சுறுத்தலாக இருந்த சீனாவுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன். இதன் காரணமாக நமது விவசாயிகளுக்கு உதவ முடிந்தது. ஆனால் இந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றால் சீனா மீதான வர்த்தக வரிகளை அவர் நீக்கிவிடுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×