search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடகொரிய ஏவுகணை
    X
    வடகொரிய ஏவுகணை

    கண்டம் விட்டு கண்டம் பாயும் புதியவகை ஏவுகணையை அறிமுகப்படுத்திய வடகொரியா

    ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் கண்டம் விட்டு கண்டம் பாயும் புதியவகை ஏவுகணையை வடகொரியா அறிமுகப்படுத்தியுள்ளது.
    சியோல்:

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் அணுகுண்டுகளை சோதித்து உலக நாடுகளுக்கு வடகொரியா சிம்மசொப்பனமாக விளங்கி வருகிறது.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான சந்திப்பிற்கு பின்னரும் வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்த சோதனைகள் தென்கொரியா, ஜப்பான், அமெரிக்காவுக்கு
    பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.

    அணு ஆயுதத்தை தாங்கிச்சென்று கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த வகை ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதால் உலக நாடுகள் பதற்றத்திலேயே இருந்து வருகிறது.

    தற்போது கொரோனா தொற்று காரணமாக உலகமே நிலைகுலைத்துள்ளபோதும் புதிய வகை ஏவுகணை ஒன்றை வடகொரியா அறிமுகப்படுத்தியுள்ளது.

    வடகொரிய ஆளும் கட்சியின் 75-வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இதை கொண்டாடும் வகையில் அந்நாட்டின் தலைநகரில் ராணுவ அணுவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் அணு ஆயுத வல்லமை கொண்ட புதியவகை ஏவுகணை இடம்பெற்றது.

    வடகொரிய ஏவுகணை

    அதேபோல் ஹிவாசங்-15 என்ற நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவக்கூட்டிய அதிநவீன நெடுந்தூர ஏவுகணையும் இடம்பெற்றிருந்தது. அணிவகுப்பில் இடம்பெற்றிருந்த புதியவகை ஏவுகணை 11 சக்கர ராணுவ வாகனத்தில் கொண்டுவரப்பட்டது. இந்த வகை ஏவுகணை இதற்கு முன்னதாக எந்த ஒரு ராணுவ அணிவகுப்பிலோ அல்லது சோதனையிலோ இடம்பெறவில்லை.

    மேலும், இந்த நிகழ்ச்சியில் பேசிய அந்நாட்டு அதிபர் கிம் ஜங் உன், சுய பாதுகாப்பை கருத்தில் கொண்டு வடகொரியா தொடர்ந்து ராணுவத்தை வலுப்படுத்தும் என்றார். மேலும், நாட்டில் நிலவி வரும் தற்போதைய பொருளாதார மந்தநிலைக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

    மேலும், பேசிய கிம், வடகொரியாவில் யாருக்குமே கொரோனா தொற்று பரவவில்லை என பெருமிதம் கொண்டார். வைரஸ் பரவலை தடுக்க உதவிய ராணுவத்திற்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

    இந்த அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று சிறிது நேரம் கழித்தே வடகொரிய ஊடகங்களில் நிகழ்ச்சி தொடர்பான காட்சிகள் வெளியிடப்பட்டது. இதற்கிடையில், வடகொரியா புதியவகை ஏவுகணையை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 
    Next Story
    ×